கம்ப்யூட்டர்கள் இல்லாமல் பயோமெட்ரிக் கருவி எதற்கு? தலைமையாசிரியர்கள் கேள்வி

சிவகங்கை, செப். 20: அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் கருவி செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு முதற்கட்டமாக பயோமெட்ரிக் கருவி கடந்த ஜனவரியில் வழங்கப்பட்டது. பள்ளியில் உள்ள கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள இக்கருவி கல்வி மாட்ட அளவிலும், மாநில அளவிலும் கல்வித்துறையுடன் இணைப்பில் இருக்கும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்கனவே பல்வேறு பயன்பாடுகளுக்கு கம்ப்யூட்டர்கள் உள்ளன. இதுபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளுக்கு தற்போது பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டன. இதில் அரசுப்பள்ளிகளுக்கு அரசு சார்பில் லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. அரசு உதவிபெறும் பெரும்பாலான நடுநிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர்களும் இல்லை. இதனால் பயோமெட்ரிக் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது போல் பயோ மெட்ரிக்கை இன்ஸ்டால் செய்வதற்கு பயோமெட்ரிக் வழங்கிய தனியார் நிறுவனம் சார்பில் ஆட்கள் வர வேண்டும். ஆனால், நடுநிலைப்பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் வழங்கிவிட்டு அவைகளை தலைமையாசிரியர்களே இன்ஸ்டால் செய்ய வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில்,`` அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவிகளை வழங்கிவிட்டு அதற்கான கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் வழங்காமல் உள்ளனர். கல்வி அலுவலகங்களில் லேட்டஸ்ட் மென்பொருள்களுடன் செயல்படும் வடிவிலான கம்ப்யூட்டர்கள் உள்ளதால் இங்கு பயோமெட்ரிக் கருவிகள் செயல்படுவதில் சிக்கல் இல்லை. ஆனால், பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர்களே இல்லை. கம்ப்யூட்டர் பாடப்பிரிவு உள்ள பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள் இருந்தாலும் அவைகள் அனைத்தும் பழைய வெர்சன்களை கொண்டதாகும். மிகவும் மெதுவான செயல்பாட்டை கொண்ட இந்த கம்ப்யூட்டருடன் உள்ள சிபியுவில் தற்போதைய மென் பொருட்களை ஏற்ற முடியாது. ஆனால், இது குறித்து எந்த ஆய்வும் செய்யாமல் எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் பயோமெட்ரிக் கருவிகளை பள்ளிகளுக்கு வழங்கி கம்ப்யூட்டருடன் இணையுங்கள் எனக்கூறியதால் என்ன செய்வது என தெரியாமல் தலைமையாசிரியர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்து கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Headmasters ,
× RELATED குறைந்த செலவில் விவசாயத்துக்கு...