×

விளம்பர பலகைகளை அகற்ற கோரிக்கை

ஊட்டி, செப்.20: ஊட்டியில் பெரும்பாலன இடங்களில் பேனர் மற்றும் தட்டிகள் அகற்றததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.தமிழகத்தில் பொது இடங்கள், அரசு கட்டிடகள், தனியார் கட்டிடங்கள், சாலைகளின் குறுக்கே மற்றும் நடைபாதையோரங்களில் பேனர், தட்டிகள் வைக்க கூடாது என பல முறை உயர் நீதிமன்றம் அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை வழங்கியது. எனினும். தொடர்ந்து அரசியல் கட்சிகள் வானுயுர்ந்த பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகளை வைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் சென்னையில் சாலையில் ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற பெண் மீது சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று விழுந்ததில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இது தமிழக மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பொது இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகள் வைக்க கூடாது என்றும் இதனை தமிழக அரசு மற்றும் காவல்துறை கண்காணிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றி வருகின்றனர். ஊட்டியில் அரசியல் கட்சிகள், தனியார் சார்பில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான பேனர்கள் மற்றும் தட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால், நகராட்சி சுவர்கள் மற்றும் போலீஸ் சிக்னல் கம்பங்களில் பெரிய அளவிலான சில விளம்பர போர்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. மழைக்காலங்கலில் பலத்த காற்று வீசும்போது அறுந்து விழுந்து வாகன ஒட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், இந்த போர்டுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. ஊட்டி நகரில் எங்கு பார்த்தாலும் இது போன்று ஹோர்டிங்ஸ் எனப்படும் விளம்பர பலகைகள் அதிகளவு தொங்கிக் கொண்டிருக்கிறது. சாலைகளின் குறுக்கே மற்றும் நடைபாதைகளில் உள்ள மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்களிலே அதிகம் காணப்படுகிறது. இதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ