×

திருப்புத்தூரில் சார்பு நீதிமன்றம் அமைக்க வக்கீல்கள் கோரிக்கை

திருப்புத்தூர், செப். 19: திருப்புத்தூர் நீதிமன்ற கட்டடத்தில் விரைவில் சாப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வக்கீல்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்புத்தூர் வக்கீல்கள் சங்க கூட்டம் நேற்று தலைவர் ராஜசேகரன் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்க கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
திருப்புத்தூர், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலிருந்து சிங்கம்புணரி தாலுகாவிற்கு தனியாக ஒரு உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்ட நிலையில், திருப்புத்தூர் தாலுகாவிலிருந்து சிங்கம்புணரி நீதிமன்றத்திற்குப் பிரிக்கப்பட்ட காவல் நிலையங்களில் திருப்புத்தூர் தாலுகாவில் உள்ள நெற்குப்பை காவல்நிலையம் இணைக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் கிரிமினல் வழக்குகளுக்கு சிங்கம்புணரிக்கும், சிவில் வழக்குகளுக்கு திருப்புத்தூருக்கும் செல்ல வேண்டிய சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே நெற்குப்பை காவல் நிலைய வழக்கு திருப்புத்தூர் நீதிமன்றத்திலேயே தொடர உத்தரவிடக் கோரியும், மேலும் திருப்புத்தூர் நீதிமன்றம் கட்டிடம் கடட்ப்பட்ட காலம் முதலே இரண்டு நீதிமன்றம் செயல்படும் முறையில் கட்டப்பட்டது. இதுவரை ஒரு நீதிமன்ற கட்டிடம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
மேல்தள கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமலேயே உள்ளது. திருப்புத்தூர் மற்றும் சிங்கம்புணரி தாலுகாவைச் சேர்ந்த வழக்காடிகள் சுமார் 90 கி.மீ. பயணம் செய்து அப்பீல் வழக்குகளுக்கு சிவகங்கை செல்ல வேண்டியுள்ளது. பொதுமக்களின் பயணச் சிரமத்தை கருத்தில் கொண்டு திருப்புத்தூரில் சார்பு நீதிமன்றம் அமைத்திடக் கோரியும், மேலும் திருப்புத்தூர் தாலுகாவைச் சேர்ந்த குன்றக்குடி வழக்காடிகள் சிவில் வழக்குகளுக்கு திருப்புத்தூர் நீதிமன்றத்தையும், கிரிமினல் வழக்குகளுக்கு காரைக்குடி நீதிமன்றமும் செல்ல வேண்டியுள்ளது.
இச்சிரமத்தைக் குறைத்து குன்றக்குடி வழக்காடிகள் 2 வழக்குகளுக்கும் திருப்புத்தூர் நீதிமன்றத்தையே பயன்படுத்த மாவட்ட நீதிபதி பரிசீலனை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வக்கீல்கள் சங்க செயலர் முருகேசன், பொருளாளர் முகமதுவாசீம் உள்ளிட்ட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Lawyers ,Thirupputhur ,
× RELATED திண்டிவனத்தில் தேனீக்கள் கொட்டியதில்...