×

குடந்தை அரசு மருத்துவமனை வளாகத்தில் நாய்களின் தொல்லையால் நோயாளிகள் கடும் அவதி

கும்பகோணம், செப். 19: கும்பகோணத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நாய்களின் தொல்லையால் நோயாளிகள், அவரது உறவினர்கள் தினம்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். கும்பகோணத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள், 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு அனைத்து விதமான நோய்களுக்கும் அவசர சிகிச்சை பிரிவும் இயங்குவதால் அரியலூர், கடலூர், திருவாரூர், நாகை மாவட்டத்தில் உள்ளவர்கள் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்களுக்கு ஓய்வறை இல்லாததால் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்திருப்பர். இதனால் மரத்தடி முழுவதும் மக்கள் கூட்டமாக இருக்கும். மேலும் சில நேரங்களில் நோயாளிகளும் ஓய்வெடுப்பர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கும்பகோணம் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.

இதனால் நோயாளிகளின் உறவினர்கள் உட்கார்ந்திக்கும் இடத்தை அங்கு சுற்றி திரியும் நாய்கள் ஆக்கிரமித்து படுத்து கொள்கிறது. இந்த நாய்களை விரட்ட முயலும்போது பொதுமக்களை கடிக்க வருகிறது. இதனால் ஓய்வெடுக்க இடமில்லாமல் நோயாளிகளின் உறவினர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பாதுகாப்பு ஊழியர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் நோயாளிகளின் உறவினர்கள் ஏதேனும் உணவுகளை வாங்கி சென்றால் அதை நாய்கள் பறித்து சென்று விடுகிறது. மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதும் நாய்கள் சுற்றி திரிகிறது. இதனால் மருத்துவமனைக்கு நோயாளிகள், அவரது உறவினர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே கும்பகோணத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்குள் நாய்களை உலா வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : complex ,Kundantha Government Hospital ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...