கிடப்பில் போடப்பட்ட ரிங்ரோடு திட்டம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் திருச்செங்கோடு நகரம்

திருச்செங்கோடு, செப்.11: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், திருச்செங்கோட்டில் ரிங்ரோடு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் திருச்செங்கோடு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருச்செங்கோடு தேர்வு நிலை நகராட்சி 25.20 சதுர கிமீ பரப்பளவு கொண்டுள்ளது. திருச்செங்கோடு வருவாய் கோட்டத்தின்  தலைநகராகவும் சேலம், சங்ககிரி, குமாரபாளையம், ஈரோடு, பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், ஜேடர்பாளையம், இறையமங்கலம் பகுதியில் இருந்து வரும் சாலைகள், திருச்செங்கோடு நகரில் கூடுகின்றன. இங்கு  ஜவுளித்தொழில், லாரி தொழில், ரிக் தொழிலின் அபரிமிதமாக வளர்ச்சியால் நகரில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது. திருச்செங்கோட்டில் அதிகமான தனியார் பள்ளி, கல்லூரிகள் இருப்பதால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் மாணவ, மாணவிகளுக்காக இயக்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளின் வாகனங்கள், திருச்செங்கோடு நகரின் மையப் பகுதியை  கடந்தே பிற  இடங்களுக்கு   செல்ல வேண்டியுள்ளது.

அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, திருச்செங்கோட்டில் போதுமான சாலைகள் இல்லை. இருக்கும் சாலைகளும் ஆக்கிரமிப்புகளால் குறுகி விட்டன.  போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி, அரசு, தனியார் நிறுவனங்களுக்கு குறிப்பிட நேரத்தில் செல்ல முடிவதில்லை. போக்குவரத்து நெரிசலால் நேரத்தை இழக்கும் பஸ்கள், அதனை ஈடுகட்ட அதிவேகமாக செல்வால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றது. பீக் ஹவர்ஸ் நேரமான காலை, மாலை மட்டுமின்றி, நாள் முழுவதுமாக திருச்செங்கோடு நகர மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி  தவிக்கின்றனர். முகூர்த்த நாட்கள், அர்த்தநாரீஸ்வரர் திருமலை மற்றும் கைலாசநாதர் ஆலயத்தில் திருமணங்கள்  நடைபெறும் நாட்களில் நாமக்கல் சாலை மற்றும் ரத வீதிகளில் வாகனங்களால் நிரம்பி விடும். திருவிழாவின் போது 4 ரத வீதிகள் மட்டுமின்றி வேலூர் சாலை, சங்ககிரி சாலை ஈரோடு சாலை இரு புறங்களிலும்  இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. டவுன் போலீசார்  அண்ணா சாலை முழுக்க  சென்டர்மீடியன் வைத்துள்ளதால், வாகனங்கள் நீண்ட தூரம் சென்று திரும்ப வேண்டியுள்ளது. திரும்பும் முனையில் பழைய  பஸ் நிலையம், சங்ககிரி சாலை, முனியப்பன் கோயில்  சாலை, வடக்கு ரத வீதி ஆகியவற்றில் இருந்து வரும் வாகனங்கள் நேருக்கு நேர் நிற்பதால் போக்குவரத்து  ஸ்தம்பிக்கிறது.

வாகன நெரிசலை போக்க நகரைச் சுற்றி  ரிங் ரோடு அமைப்பது நிரந்தரத் தீர்வாக அமையும்.   நாமக்கல் சாலையையும், பள்ளிபாளையம் சாலையையும் இணைக்கும்  பைபாஸ்  திட்டம் மட்டுமே தற்போது அரசிடம் உள்ளது.
ராசிபுரம் சாலை மாதா கோயிலில் இருந்து போக்கம்பாளையம் மீன் கிணறு வழியாக வரும் சாலை, தோக்கவாடி  அருகே பள்ளிபாளையம் சாலையோடு இணைக்கப்படும். இந்த திட்டத்திற்கு சுமார் ₹45 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு நிதி  ஒதுக்காததால் சாலைக்கான நிலம் கையகப்படுத்திவதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது என்று  கூறப்படுகிறது. ரிங் ரோடு அமைக்கப்பட வேண்டும் என்று பஸ், லாரி, ரிக்,மோட்டார் தொழில்  சங்கங்கள்,  ரோட்டரி, லயன்ஸ் போன்ற அமைப்புக்கள் நீண்ட காலமாக அரசுக்கு  கோரிக்கை  விடுத்து வருகின்றன.

Tags : town ,Thiruchengode ,
× RELATED புதுகை அடுத்த ஆலங்குடி நகரில் சாலை...