செல்போன் டவர் மீது ஏறி இந்து மக்கள் கட்சி பிரமுகர் தற்கொலை மிரட்டல்

புழல்: செல்போன் டவர் மீது ஏறி இந்து மக்கள்கட்சி பிரமுகர் தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. செங்குன்றம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (50). இவர் இந்து மக்கள் கட்சி மாவட்ட அமைப்பாளர். நேற்று காலை செங்குன்றம் வள்ளலார் தெருவில் உள்ள செல்போன் டவரின் உச்சிக்கு திடீரென ஏறிய சண்முகசுந்தரம் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு மக்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து செங்குன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, செல்போன் டவரில் நின்றிருந்த சண்முகசுந்தரத்தை கீழே இறங்கி வருமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது அவர், ‘‘வக்பு வாரிய இடத்தில் உள்ள இந்துக்களுக்கு பட்டா வழங்குவதாக வருவாய் துறையினர் உறுதியளித்தால்தான் கீழே இறங்கி வருவேன்’’ என்றார். இதையடுத்து ‘‘வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறோம். நீங்கள் கீழே இறங்குங்கள்’’ என்று போலீசார் கூறினர். இதையேற்று சண்முகசுந்தரம் கீழே இறங்கி வந்தார். அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : suicide ,Hindu People's Party ,
× RELATED 24ம் தேதி வரை நடக்கிறது தஞ்சையில்...