பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும்

ஆவடி, செப்.11: பட்டாபிராம், சி.டி.எச் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்ட டாஸ்மார்க்  மேலாளர் அலுவலகத்தில் புகார்  அளித்தனர். ஆவடியை அடுத்த பட்டாபிராம், சி.டி.எச் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் 6 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கிருந்து நூற்றுக்கணக்கான குடிமகன்கள், மது அருந்திவிட்டு சி.டி.எச் சாலையில் அரைகுறை ஆடைகளுடன் கலாட்டாவில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால், அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி பட்டாபிராம், சி.டி.எச் சாலை, சார்லஸ் நகர் பகுதியில் மேலும் ஒரு புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.  இதனை கண்டித்து தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மார்க் கடை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, நடந்த  பேச்சுவார்த்தையில் டாஸ்மார்க் கடையை மூட  நடவடிக்கை எடுக்கப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். ஆனால், டாஸ்மாக்கடை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கலைச்செல்வி தலைமையில் பெண்கள் திருமழிசையில் உள்ள டாஸ்மார்க் அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர், அங்கு அவர்கள் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பட்டாபிராம், சி.டி.எச்  சாலையில் புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டத்தில் பெண்கள் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை வாங்கிய டாஸ்மாக் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Tags : task force ,public ,shop ,
× RELATED டாஸ்மாக் கடைக்கு பூட்டுபோட முயற்சி 14 பேர் கைது