ஆண்டிபட்டி அருகே ரூ.84.70 லட்சம் மதிப்பில் கருங்குளம், செங்குளம் கண்மாய் சீரமைப்பு பணி துவக்கம்

ஆண்டிபட்டி, ஆக. 22: ஆண்டிபட்டி அருகே உள்ள கருங்குளம், செங்குளம் கண்மாய் சீரமைப்பு பணி ரூபாய் 84.70 லட்சம் மதிப்பீட்டில் துவங்கி உள்ளது. ஆண்டிபட்டி அருகே குன்னூருக்கு தெற்கே கருங்குளம், செங்குளம் கண்மாய் 46.68 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கண்மாய்கள் நிரம்பினால் 352 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த கண்மாய்க்கு மழைக்காலங்களில் வைகை ஆற்றிலிருந்து நீர்வரத்து ஏற்படும்போது கண்மாய் நிரம்பும். இந்நிலையில் தற்போது ரூ.84.70 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தில் கரைகள் வலுப்படுத்துதல், தூர் வாருதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் கருங்குளம் கண்மாய் கரையில் இரு கண்மாய்கள் சேரும் இடத்தில் உட்புறம் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கருங்குளம் கண்மாய் கரை 1380 மீட்டர், செங்குளம் கண்மாய் கரை 1332 மீட்டர் நீளம் கொண்டது. நீர் பிடிப்பு பரப்பு 42.97 ஏக்கர், 46.68 ஏக்கர் பரப்பு கொண்டுள்ளது. கருங்குளம் கண்மாயில் 6.92 மில்லியன் கன அடி நீரும், செங்குளம் கண்மாயில் 2.76 மில்லியன் கன அடி நீரும் தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்த முடியும். கண்மாயில் முழு அளவில் நீர் தேங்கினால் இப்பகுதியில் 352 ஏக்கர் நிலங்களில் பாசனம் உறுதிப்படுத்தப்படும்.சுற்றுப்பகுதியின் பல ஏக்கர் நிலங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். தற்போது சீரமைக்கும் பணி கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Tags :
× RELATED பூட்டிய வீட்டில் நகை, பணம் கொள்ளை