×

கழுமலையாற்றில் கழிவுநீர் கலப்பதால் சம்பா சாகுபடியை புறக்கணிக்க சீர்காழி விவசாயிகள் முடிவு அதிகாரிகளுக்கு கோரிக்கை அளித்தும் பயனுமில்லை

சீர்காழி,ஆக.22: சீர்காழி நகரை கடந்து செல்லும் கழுமலையாறு நகரப் பகுதிக்கும், கிராம பகுதிக்கும் முக்கிய நீர் ஆதாரமாக இருந்த வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் போது அது புதுமண்ணியாற்று வழியாக வந்து கழுமலையாற்றை வந்தடைந்து பின்பு கழுமலையாற்று தண்ணீர் தேனூர் கொண்டல், வள்ளுவக்குடி, நிம்மேலி அகணி, சீர்காழி, கைவிளாஞ்சேரி, தென்பாதி, திட்டை, திருத்தோணிபுரம், தில்லைவிடங்கன், செம்மங்குடி என 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தேனூரில் தொடங்கும் கழு மலையாறு சிவனார் விளாகம் உப்பனாற்றில் கலக்கிறது. புதுமண்ணி யாற்றிலிருந்து கழுமலையாறு பிரிந்து சீர்காழி நகர் பகுதி வழியாக பல்வேறு கிராமங்களை சென்றடைகிறது. தேனூர் பகுதியிலிருந்து சீர்காழி நகராட்சி எல்லை பகுதியான கோயில்பத்து வரை கழுமலையாறு பாசன ஆறாக காணப்படுகிறது. அதன் பிறகு நகர் எல்லை பகுதியான கோயில்பத்து, ரயில்வே சாலை, கொள்ளிடமுக்கூட்டு ,புழுகாப்பேட்டை, வாய்க்கால்ங்கரை தெரு, புதிய பேருந்துநிலையம், அரசு மருத்துவமனை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக கட்டிடங்களிலிருந்து கழிவுநீர், செப்டிக்டேங்க் கழிவுநீர் ஆகியவை கழுமலையாற்றில் திறந்து விடப்படுகிறது. குறிப்பாக நகர் பகுதிகளில் பெருகிவிட்ட பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து செப்டிக்டேங்க் கழிவுநீர் குழாய்கள் அமைத்து கழுமலையாற்றில் நேரடியாக விடப்படுகிறது.

இதனால் பழமையான கழுமலையாறு மாசடைந்து கழிவுநீர் ஆறாக மாறிவிட்டது கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கழுமலையாறு பொதுப்பணித்துறையினரால் தற்போது தூர்வாரப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நகராட்சி எல்லைபகுதியில் கழிவுநீர் விடப்படுவதை தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சுமார் 3ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யமுடியாத நிலை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.இதுகுறித்து சீர்காழி நகராட்சி அலுவலகம் சுகாதாரத் துறையினர், அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், விவசாயிகள் நேரில் சென்று வலியுறுத்தியும் கழிவுநீர், செப்டிக்டேங்க் நீர் விடப்படுவதை தடுக்க எந்தவித நடவடிக்கை இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த ஆண்டும் கழுமலையாற்று தண்ணீரை கொண்டு சம்பா சாகுபடி செய்து அறுவடை நேரத்தில் புகையான் பாதிப்பு ஏற்பட்டு நஷ்டம் அடைவதை விட சம்பா சாகுபடி செய்வதை புறகணிக்க கழுமலையாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Tags :
× RELATED கீழ்வேளூர், திருக்குவளை பகுதியில் 3வது நாளாக பரவலாக மழை