ஏமாற்றி எழுதி வாங்கிய ஆசிரியரின் சொத்துக்களை மீட்கக்கோரி எஸ்.பி.யிடம் முன்னாள் மாணவர்கள் மனு

திருவள்ளூர், ஆக. 22: தங்களது ஆசிரியரியருக்கு சொந்தமான சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி, திருவள்ளூரில் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு முன்னாள் மாணவர்கள் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருத்தணி ஜோதிசாமி தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரராவ். ஒய்வு பெற்ற ஆசிரியர். இவர், கே.ஜி.கண்டிகளியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 1970 முதல் 1997 வரை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு சொந்தமான சொத்துக்களை அதே பகுதியை சேர்ந்த யோகலட்சுமி, சந்தோஷ் மற்றும் திவாகர் ஆகியோர் ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த முன்னாள் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர், தங்களது ஆசிரியர் ஈஸ்வரராவ் சொத்துக்களை, மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, நேற்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி., அரவிந்தனிடம் புகார் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.பி.,இம்மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். ஆசிரியருக்கான சொத்துக்களை மீட்க கோரி  முன்னாள் மாணவர்கள்  எஸ்.பி., யிடம் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags :
× RELATED ஊத்துக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி