×

பட்ஜெட் வெளியான ஒரு மாதத்தில் இந்திய பங்குசந்தையில் ரூ.4.50 லட்சம் கோடி சரிவு காங்கிரஸ் செயலாளர் எம்பி மாணிக்கம் தாகூர் பேச்சு

விருதுநகர், ஆக. 20: பட்ஜெட் வெளியிடப்பட்ட ஒரு மாதத்தில் இந்திய பங்குசந்தை ரூ.4.50 லட்சம் கோடி சரிவை சந்தித்துள்ளது. இந்திய சந்தை பெரும் வணிகர்களின் கைகளுக்கு மாறி வருகிறது. தமிழகத்தில் ஏதோ ஒரு மாற்றத்தை மத்திய அரசு நடத்த இருப்பதாக காங்கிரஸ் செயலாளர் எம்பி மாணிக்கம்தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகர் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் குருசாமி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் எம்பி மாணிக்கம்தாகூர் உரையில், இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. நாட்டில் உள்ள 6 விமான நிலையங்கள் அம்பானிக்கும், 90 நகரங்களில் கேஸ் விநியோகம் அதானிக்கு வழங்கி உள்ளனர்.
மேலும் நாட்டின் பொதுத்துறையான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவை கிடைக்காமல் செய்து வருகின்றனர். மக்களை ரிலையன்ஸ் நிறுவன ஜியோவிற்கு மாற்றி வருகின்றனர்.
பட்ஜெட் வெளியிடப்பட்டு ஒரு மாதத்தில் இந்திய பங்கு சந்தையில் 4.50 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். வடமாநிலங்களில் முஸ்லீம்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு, தமிழக ஓய்வூதியர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு இணையாக ஓய்வூதியம், 2003க்கு பிறகு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு பழைய  ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டுமென கோரிக்கை எழுப்புவேன். தற்போது காஷ்மீரில் 370 சட்டத்தை வாபஸ் பெற்றது தொடர்பாக தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். ஜூன்.7ல் நிதியமைச்சர் புறநானுற்றை பற்றியும், ஆக.14ல் ஜனாதிபதி பாரதியை பற்றியும், ஆக.15ல் பிரதமர் திருக்குறள் பற்றியும் பேசி இருக்கிறார்கள் என்றால் தமிழக மக்கள் மொழி, பண்பாடு மீது வைத்திருக்கும் பற்றை பயன்படுத்தி ஏதோ ஒன்றை தமிழகத்தில் நடத்த இருக்கிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது என்றார். கூட்டத்தில் ஓய்வூதியோர் மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை