தார்வாடையே பார்க்காத தயாபுரம் ரோடு மழைக்கு குண்டும், குழியுமாக மாறியதால் பொதுமக்கள் அவதி

மானாமதுரை, ஆக.20: மானாமதுரை-சிவகங்கை மெயின்ரோட்டில் உள்ள தயாபுரம் ரோடு போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ளநிலையில் சிறுமழைக்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையை செப்பணிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.மானாமதுரை-சிவகங்கை மெயின்ரோட்டில் தாலுகா அலுவலகத்திற்கு முந்தைய பஸ்டாப் தயாபுரம் ஆகும். இங்குள்ள தனியார் தொழுநோய் மருத்துவமனை நூறு ஆண்டுகளை கடந்தும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். சிவகங்கை மெயின்ரோட்டில் உள்ள பஸ்ஸ்டாப்பில் இருந்து 300 மீட்டர் தூரமுள்ள இந்த ரோடு கடந்த பல ஆண்டுகளாக போடப்படாததால் குண்டும், குழியுமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மானாமதுரை பகுதியில் பெய்யும் சிறு மழைக்கே சகதிக்காடாக மாறி பாதசாரிகள் நடந்து செல்லமுடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் மழைநீர் தேங்கிய பள்ளங்களில் சிறுவர்களும், முதியவர்களும் விழும் நிலை உள்ளது. பகலில் மருத்துமனைக்கு வரும் நோயாளிகளும், அவர்களை ஏற்றி வரும் ஆட்டோக்களும் சகதியான ரோட்டை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த போஸ் கூறுகையில், தயாபுரம் மருத்துவமனை ரோட்டை தவிர மருத்துவமனை அருகே உள்ள தயாநகர் குடியிருப்போர்களுக்கும், அதனை கடந்து கல்குறிச்சி, ஆலங்குளம் செல்லும் கிராமத்தினருக்கும் இந்த ரோடு சீரமைக்கப்படாததால் சிரமப்படுகின்றனர். எனவே ரோட்டை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Tags :
× RELATED திருப்புத்தூர் அருகே மினி மாரத்தான் ஓட்டம்