ஜனநாயக பாதையை விட்டு சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் மோடி முத்தரசன் குற்றச்சாட்டு

பொன்னமராவதி, ஆக.20: இந்தியாவில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஜனநாயக பாதையைவிட்டு சர்வாதிகார, ஏதெச்சதிகார, பாசிச ஆட்சியை நடத்துகிறது என்றார்.பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது: ஆர்எஸ்எஸ்சின் மனு தர்ம கொள்கைகளை பாஜக ஆட்சி மூலம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தங்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஜனநாயக போர்வையை போர்த்தியபடி பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. மிக்குறைந்த நாள்களில் நாடாளுமன்றத்தில் அதிக பட்சமான மசோதாக்களை அவசர அவசரமாக அறிமுகப்படுத்தி அவற்றை நிறைவேற்றி அமுல்படுத்திள்ளது. பாஜக அரசு. இத்தகைய ஜனநாயக விரோதமான செயல் எந்த ஒரு அரசிலும் நடைபெற்றதில்லை. நாட்டில் அரசியலமைப்பு சட்டங்கள், மதச்சார்பற்ற கொள்கைகள் கேலிக்கூத்தாகியுள்ளது.

மகாத்மா காந்தி வேலை உறுதி சட்டத்திற்கு புறம்பான முறையில் செயல்படுத்துவதோடு அத்திட்டத்தை நாடாளுமன்றத்திலேயே நிறுத்தப்படும் என அறிவித்தது வேதனைக்குறியது. மேலும் தகவல் உரிமை பெறும் சட்டம் நீர்த்துபோக செய்யப்பட்டுள்ளது. யாரை வேண்டுமானாலும் தீவிரவாத முத்திரை குத்தி கைது செய்யும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. ஜம்மு காஷ்மீரை அதிகாரத்தை குறைத்து இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்து அதன் உரிமைகளை பறித்தது ஜனநாயக படுகொலையாகும். தற்போது அங்கு ஆட்சி நடத்திவரும் ஆளுநரும், பிரதமரும் காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்று கூறுவது அப்பட்டமான பொய். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கைக்கு புறம்பாக மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் ஆளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மாநில உரிமைகள் பறிபோவதை குறித்து எந்த விதமான கவலையும் கொள்ளாத அரசு. மத்திய அரசுக்கு விசுவாசமாக செயல்பட்டு வருகிறது மாநில அரசு. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. சமூகவிரோதிகள், கூலிப்படையினரின் கை மேலோங்கி உள்ளது. அன்றாடம் கொலைகள் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரியில் டாஸ்மார்க் ஊழியர், பெண் ஒருவர் என இருவர் கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை நடந்து 4 நாட்களாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. படுகொலைக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்என அமைச்சர்கள் கேள்வி கேட்பது வேதனைக்குறியது என்றார்.

Tags :
× RELATED கீரனூரை சுற்றியுள்ள...