நான்குவழிச்சாலையில் குழாய் சீரமைப்பு பணி இழுத்தடிப்பு

திருப்பரங்குன்றம், ஆக. 14: மதுரை மேலக்கால் சந்திப்பு நான்குவழிச்சாலையில், குழாய் சீரமைப்பு பணிக்காக தோண்டிய பள்ளத்தால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குழாய் சீரமைப்பு பணியை விரைவாக முடித்து, பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மேலக்கால் சாலை சந்திப்பில் கன்னியாகுமரி-பெங்களுரூ நான்குவழிச்சாலை செல்கிறது. இந்த சாலையின் குறுக்கே, பூமிக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு, மேலக்கால் நீரேற்று நிலையத்தில் இருந்து மதுரை நகருக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த குழாயில் கசிவு ஏற்பட்டதால், ஒரு வாரத்திற்கு முன்பு மதுரை மாநகராட்சி சார்பில், நான்குவழிச்சாலை நடுவே பள்ளம் தோண்டி, குழாய் சீரமைப்பு பணியை தொடங்கினர். ஆனால், வேலையை முடிக்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால், நான்குவழிச்சாலையில் தோண்டிய பள்ளம் மூடப்படாமல் உள்ளது. நான்குவழிச்சாலையின் ஒரு பகுதி போக்குவரத்து அருகிலுள்ள சர்வீஸ் ரோடு வழியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மதுரை மேலக்கால் சாலை சந்திப்பு உள்ளதால், நான்குவழிச்சாலையில் திருமங்கலம் நோக்கி வரும் வாகனங்கள், சர்வீஸ் சாலையில் வேகமாக வந்து திரும்பும்போது, நான்குவழிச்சாலையை கடக்கும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் சாலையை கடக்க முயலும் டூவீலர்களில் செல்வோர் அதிக பாதிப்படைகின்றனர். எனவே, நான்குவழிச்சாலையில் குழாய் சீரமைப்பு பணியை விரைவாக முடித்து, பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஏடிஜிபியாக பதவி உயர்வு மதுரை கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு