சீரமைப்பு பணிகள் முடிந்து அமைச்சருக்காக காத்திருக்கும் தொட்டபெட்டா சாலை

ஊட்டி,  ஆக. 14:  ெதாட்டபெட்டா சாலை சீரமைக்கப்பட்டு ஒரு மாத்திற்கு மேல் ஆகியும்  திறக்கப்படாமல் உள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி  செல்கின்றனர்.    நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா  பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள  தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளுக்கு மட்டும்  செல்லாமல், தொட்டபெட்டாவை காணவும் செல்கின்றனர். தொட்டபெட்டா செல்லும் சாலை  வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இச்சாலை மிகவும் பழுதடைந்து  காணப்பட்டது. பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில், இச்சாலையில் வாகனங்கள்  செல்லவே மிகவும் சிரமப்பட்டன. குறிப்பாக, சிறிய கார்கள் மற்றும் இரு சக்கர  வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.  இந்நிலையில்,  இச்சாலையை சீரமைக்க முடிவு செய்த மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஊரக முகமை  சார்பில் ரூ.1.6 கோடி செலவில் சாலை சீரமைக்கும் பணிகளை கடந்த இரு  மாதங்களுக்கு முன் துவக்கியது.
இதற்காக மே மாதம் 28ம் தேதி முதல்  தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. சாலை  சீரமைப்பு பணிகளும் வேகமாக நடந்தது. சாலை சீரமைப்பு பணிகள் கடந்த  ஜூன் மாதமே நிறைவடைந்தது. எனினும், இச்சாலை ஒரு மாத்திற்கு மேல் ஆகியும்  திறக்கப்படாமல் உள்ளது. இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா  வரை சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

  மேலும் வார விடுமுறை மற்றும் பக்ரீத்  என 3நாட்கள் விடுமுறை வந்துள்ள நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள்  ஊட்டி வந்துள்ளனர். ஆனால், இவர்கள் தொட்டபெட்டா செல்ல முடியாத நிலையில்  ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். சாலை சீரமைப்பு பணிகள் முடிந்து ஒரு  மாத்திற்கு மேல் ஆகியும், அமைச்சர் வந்து திறக்க வேண்டும் என தொட்டபெட்டா  சாலையை மூடி வைத்துள்ளது சுற்றுலா பயணிகளையும், சுற்றுலா ஆர்வலர்களை  அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.  இது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட  அமைச்சரின் வருகை தள்ளி போகும் நிலையில், எப்போது தொட்டபெட்டா சாலை  திறக்கப்படும் என்பது சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி, நீலகிரி மாவட்ட  கலெக்டர் உட்பட அதிகாரிகளுக்கே தெரியாது எனவும் சில அதிகாரிகள் புலம்பி  தீர்க்கின்றனர். வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் விரும்பி செல்லும்  தொட்டபெட்டா சுற்றுலா தலம், அமைச்சர் ஒருவருக்காக இரு மாதங்கள்  பூட்டிக்கிடப்பது சுற்றுலா பயணிகளை மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களையும்  தற்போது அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.Tags :
× RELATED ஊட்டி ஏடிசி பகுதியில் இன்டர்லாக் கல் பதிக்கும் பணி துவக்கம்