விருத்தாசலத்தில் அனைத்து கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், ஆக. 14: விருத்தாசலம் அருகே உள்ள மு.பட்டி பகுதியில் கடந்த வாரம் இரு தரப்பினரிடையே மோதல் உருவானது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஒரு பகுதியினர் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாகவும், அதனால் அப்பகுதி மக்களுக்கு ஆயுதம் மற்றும் துப்பாக்கி வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் விருத்தாசலம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விசிக நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் திருஞானம், சுப்பு ஜோதி. பாஸ்கர், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட துணைத்தலைவர் அருட்செல்வன், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டிபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் மேட்டு காலனி முருகன் வரவேற்றார். மண்டல செயலாளர் திருமாறன், தொகுதி செயலாளர் அய்யாயிரம், முற்போக்கு மாணவர் கழக மாநில துணை செயலாளர் நீதிவள்ளல், ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் துரைமருதமுத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இதில் விருத்தாசலம் அருகே உள்ள பட்டி குடிக்காடு, ராசாபாளையம், முகாசபரூர், எடச்சித்தூர், மு.அகரம், விஜயமாநகரம் பெரியவடவாடி, பவழங்குடி, கட்டிய நல்லூர், ஆலடி, மேச்சேரி, கோபுராபுரம், சித்தேரிகுப்பம் கவனை உள்ளிட்ட கிராமங்களில் அதிகமாக வன்கொடுமை நிகழ்வுகள் நடப்பதாகவும், அதனால் அப்பகுதிகளை வன்கொடுமை பகுதியாக அறிவிப்பு செய்து, அப்பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆயுதம் மற்றும் துப்பாக்கி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஆயுதம் மற்றும் துப்பாக்கி வழங்க வேண்டும் என கூறி பிஎஸ்என்எல் அலுவலகத்திலிருந்து சப்-கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்று சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்போவதாக விருத்தாசலம் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி தராமல் மறுத்ததால் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் ஏஎஸ்பி தீபாசத்யன், தாசில்தார் கவியரசு மற்றும் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நாளை (இன்று) இரு தரப்பினரிடமும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெறும். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags :
× RELATED ஆற்று பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு