×

குமரியில் சுதந்திர தின விழா பாதுகாப்பு கடலோர பகுதிகள், கோயில்களில் தீவிர கண்காணிப்பு வாகன சோதனையில் 747 வழக்குகள் பதிவு

நாகர்கோவில், ஆக.14: குமரியில் சுதந்திர தின விழாவையொட்டி கோயில்கள், கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 73 வது சுதந்திர தின விழா நாளை (15ம் தேதி) ெகாண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் காலை 9.05 மணிக்கு, கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். எஸ்.பி. ஸ்ரீநாத், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. சுதந்திர தின விழாவுக்கான போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. சுதந்திர தின விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் ஆயுதப்படை போலீசார், சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் உள்பட சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

ரயில்களிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. சோதனை சாவடிகள் மற்றும் கடலோர சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். நாகர்கோவில், கன்னியாகுமரி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள லாட்ஜூகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். லாட்ஜூகளில் தங்கி இருப்பவர்களிடமும் விசாரணை நடந்தது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் அனைவரும் சோதனைக்கு பின்னரே படகு சவாரி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

கன்னியாகுமரி பகவதியம்மன், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று மாலை முதல் பாதுகாப்பு பணிகள் மற்றும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு போலீசார் நடத்திய வாகன சோதனையில் மொத்தம் 747 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நாகர்கோவில் துணை போலீஸ் சரகத்தில் 115 வழக்குகளும், தக்கலை துணை போலீஸ் சரகத்தில் 157 வழக்குகளும், குளச்சலில் 209 வழக்குகளும், கன்னியாகுமரி துணை போலீஸ் சரகத்தில் 266 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஹெல்மெட் வழக்குகள் 485 ஆகும்.

Tags :
× RELATED கொரோனா அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை