×

பெரியபாளையம் அம்மன் கோயில் ஆடித்திருவிழா ஆரணி ஆற்றில் கொட்டகை அமைத்து பணம் வசூல்

ஊத்துக்கோட்டை, ஆக. 11: பெரியபாளையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீபவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடித்திருவிழா கடந்த  ஜூலை 17ம் தேதி தொடங்கியது. இந்த விழா சனி, ஞாயிற்றுக்கிழமை என 14 வாரங்கள் நடைபெறும்.
இத்திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள். அவ்வாறு ஆடித்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் இரவு தங்குவதற்கு கோயில் சார்பில் கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் வசதிக்காக  தங்குவதற்காக கட்டிட வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது போதுமானதாக இல்லை. தற்போது 4-வது வாரம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவு காணப்படும். இதனால் தனிநபர்கள் ஆரணி ஆற்றில் தீப்பிடிக்காத தற்காலிக கொட்டகைகளை அமைத்து வருகிறார்கள். இதில் பக்தர்கள் இரவு தங்கி அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். அவர்களிடம் பணம் வசூல் செய்கின்றனர்.

எனவே பக்தர்கள் வசதிக்காக அரசே தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூறியதாவது: ”ஆடித்திருவிழாவையொட்டி பெரியபாளையம் கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.  ஆனால் எங்களுக்கு பெரியபாளையத்தில் போதுமான அளவு தங்கும்  வசதி இல்லை.  தனியார் லாட்ஜிகளில் வாடகைக்கு ரூம்கள் எடுத்தால் அதிக அளவு வாடகை கேட்கிறார்கள். எங்களால் கொடுக்க முடியவில்லை. அதனால் வெட்ட வெளியில் தங்கி சாமி தரிசனம் செய்கிறோம். மேலும் தனிநபர்கள் மூலம் தற்போது ஆரணி ஆற்றில் தற்காலிகமாக அமைக்கப்படும் கொட்டகைகளில் தான் தங்குகிறோம். ஆனால்,  மழை வந்தால் மிகவும் சிரமமாக இருக்கும். எனவே, பக்தர்கள் வசதிக்காக அரசே தங்கும் அறைகள் கட்டி தர வேண்டும்.” என கூறினர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...