×

போலி கணக்கை துவக்கி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேஸ்புக்கில் பதிவு

திருவள்ளூர், ஆக. 8: திருவள்ளூரை சேர்ந்த முஸ்லீம் ஒருவரின் பெயரில், பேஸ்புக்கில் போலி கணக்கை துவக்கி பதிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதை எதிர்த்து அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் நீண்டகாலமாகவே போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், திருவள்ளூரை சேர்ந்த ஜாகிர் ஹுசைன்(50) என்பவர் திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில்  புகார் மனு கொடுத்துள்ளார்.அதில், தனது பெயரில் பேஸ்புக்கில் யாரோ ஒருவர் போலி கணக்கை துவக்கி, மதமோதலை தூண்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.

இதனால், இந்து - முஸ்லீம் இடையே கலவரம் ஏற்படுவதோடு, தனிப்பட்ட எனது மற்றும் என் குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.எனவே, எனது பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கை துவக்கி சமூக அமைதிக்கு கேடு விளைவித்த நபரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என, பதிவின் ‘ஸ்கிரீன் ஷாட்’டையும் இணைத்து மனு கொடுத்துள்ளார்.இதுகுறித்து திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றார்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...