×

தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான நடவு பணி துவக்கம்

ஊட்டி, ஜூலை 24: நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் சீசன் செப்டம்பர் மற்றும் அக்ேடாபர் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது.  அந்நேரத்தில், வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இச்சமயங்களில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் விழாக்கள் ஏதும் நடத்தப்படுவதில்லை. எனினும், இரண்டாம் சீசனுக்கு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அனைத்து பூங்காக்களிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பூக்கள் பூத்து குலுங்கும். இம்முறை இரண்டாம் சீசனுக்காக ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவில் 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர் அலங்காரங்கள் செய்யவும், 125 வகையான 2.5 லட்சம் புதிய மலர் செடிகள் நடவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாம் சீசனுக்கான மலர் நாற்றுக்கள் நடவு பணிகள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் துவங்கி நடந்து வருகிறது. இந்த நடவு பணிகளை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் துவக்கி வைத்தார். தற்போது இத்தாலியன் பூங்கா, புதிய பூங்கா, நுழைவு வாயில் ஆகிய பகுதிகளிலும் மற்றும் 10 ஆயிரம் தொட்டிகளில் நடவு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நாற்று நடவு பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.    இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராதாகிஷ்ணன் கூறுகையில்,  இரண்டாவது சீசனுக்காக பூங்கா முழுவதும் 2.5 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்படவுள்ளது. மேலும், 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு அலங்கார மாடத்தில் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் சீசனுக்காக நடவு செய்யப்பட்டிருந்த மலர் செடிகள் அனைத்தும் அகற்றப்பட்டு, புதிய நாற்றுக்கள் நடவு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்கள் நாற்றுக்குள் நடவு பணிகள் நடக்கும். தொடர்ந்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இம்முறை பிரெஞ்ச் மற்றும் இன்கா மேரிகோல்டு, சால்வியா, டையாந்திஸ், பெட்டூனியா, பிகோனியா, டேலியா, கேலண்டுல்லா, செல்லோசியா, பிளக்ஸ் உட்பட 125 வகையான மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த செடிகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மலர்கள் பூத்து விடும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசனை கொண்டாட ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை கண்டு ரசிக்க முடியும். முதல் சீசன் போது போதிய மழை கிடைக்கவில்லை. ஆனால், தற்போது நாள் தோறும் சாரல் மழை பெய்து வரும் நிலையில், அனைத்து செடிகளும் நல்ல முறையில் வளர்ந்து அதிகளவு பூக்கள் பூத்து குலுங்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இம்முறை இரண்டாவது சீசனுக்கு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளும் மலர் கண்காட்சியை போன்ற ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர்களை கண்டு ரசிக்க முடியும், என்றார்.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு