×

5 ஆண்டுகளாக காலியாக உள்ள 1200 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் சிறப்பு செயற்குழுவில் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூலை 24: தமிழ் நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும்-உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை கல்வி மாவட்ட தலைவர் முத்தையன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை அனைத்து அரசு பள்ளியில் பயிலும் சுமார் 65லட்சம் மாணவ, மணவிகளுக்கு விலையில்லா உடற்கல்வி பாடபுத்தகம் உடனே வழங்கிட வேண்டும். ஐந்து ஆண்டுகளாக காலியாக உள்ள சுமார் 1200 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையுள்ள அனைத்து பள்ளிகளில் சுமார் 65 லட்சம் மாணவ, மாணவிகளின் உடல் நலன் கருதி குறைந்தபட்சம் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டுகிறோம். 9 ஆண்டுகளாக குறைந்தபட்ச ஊதியம் பெற்றுக் கொண்டு பணியாற்றும் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களை காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு ஈர்ப்பு செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக காலியாக உள்ள 32 மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை உடனே நிரந்தர பணியிடமாக நிரப்பிட வலியுறுத்துகிறோம். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 9,10 ம் வகுப்பு மாணவர்கள் பயன் பெறும் வகையில் 3546 இடைநிலை, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடற்கல்வி இயக்குநர் நிலை -2 (பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர்) பணியிடமாக தரம் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ