×

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அடைக்க ஆக்கிரமிப்பு கால்நடைப்பட்டிகள் மீட்கப்படுமா?

திருவள்ளூர், ஜூலை 23: திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், ஏராளமான மாடுகள் சுற்றித்திரியும் நிலையில், அவற்றை அடைப்பதற்காக அமைக்கப்பட்ட கால்நடைப்பட்டிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை மீட்டு, புதிதாக கட்டி பயனுக்கு கொண்டுவர வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் நகரில் ஜெ.என்.சாலை வழியாக ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி மற்றும் ரயில் நிலையம் என பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. இங்கு வசிக்கும் சிலர், தங்கள் ஆடு, மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர்.

அதிவேகமாக வாகனங்கள் சென்று வரும் நிலையில், எதிர்பாராத விதமாக திடீரென சாலையில் குறுக்கே மாடுகள் வந்துவிடுகின்றன. திக்கு முக்காடும் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் பல நேரங்களில் விபத்தினை சந்திக்க நேரிடுகிறது. விரைவான போக்குவரத்து ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட மாநில நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் தற்போது வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிய தடை உள்ளது. இவ்வாறு திரியும் மாடுகளை பிடித்து அடைக்க வருவாய்த்துறை சார்பில் ‘’கால்நடைப்பட்டி’’’’ அமைக்கப்பட்டன. ஒரு நிலத்தின் சொந்தக்காரரோ, அனுபவித்து சாகுபடி செய்பவரோ, குத்தகைதாரரோ அந்த நிலத்தில் வழி மீறி நுழைந்து அதிலுள்ள பயிர் அல்லது விளைச்சலை சேதம் உண்டு பண்ணுகிற கால்நடைகளை பிடித்து, அதனை பிடித்த 24 மணி நேரத்துக்குள் கால்நடைப்பட்டிக்கு அனுப்பி அடைக்கலாம்.

சில கால்நடைகள் வழி மீறி, அரசுக்கு சொந்தமான தோட்டங்கள், கால்வாய்கள் மற்றும் ஏரிக்கரைகளும் சேதம் விளைவிக்குமேயானால் அத்தகைய கால்நடைகளையும் பிடித்து 24 மணி நேரத்துக்குள் பட்டியில் அடைக்கலாம். மாட்டின் உரிமையாளர் வந்து கேட்கும்போது, அவரிடமிருந்து அபராதத் தொகை மற்றும் தீனிச் செலவை வசூலித்துக் கொண்டு, கால்நடைகளை விடுவிக்க வேண்டும்.

முதல் முறையாக பிடிப்பட்டால் ரூ.500, இரண்டாவது முறைக்கு ரூ.1000, மூன்றாவது முறைக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். அதற்கு மேல் நீடித்தால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென மாவட்டத்தில் திருவள்ளூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம் உட்பட பல பகுதிகளில் வருவாய்த்த துறைக்கு சொந்தமான கால்நடைப்பட்டிகள் இருந்தன.

இந்த பட்டிகள் அனைத்தும் தற்போது இருந்த இடம் தெரியாமல் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த கால்நடைப்பட்டிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர்தான் முழு பொறுப்பு. இதற்கென தனியாக விஏஓக்கள் கணக்கை பராமரிக்க வேண்டும்.கால்நடைப்பட்டிகள் இருக்கும் இடம் தெரியாததால், போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் கால்நடைகளை யாரும் பிடித்து ஒப்படைப்பதில்லை.
எனவே, அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பில் உள்ள கால்நடைப்பட்டிகளை மீட்டு, புதிதாக பட்டிகளை கட்டி பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கவும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...