குடிமராமத்து பணிகளை ஒதுக்கக்கோரி இளையான்குடி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

இளையான்குடி, ஜூலை 23: குடிமராமத்து பணிகளை ஒதுக்க வேண்டும் என்று இளையான்குடி பொதுப்பணித்துறை அலுவலகத்தை அடுத்தடுத்து பழைய, புதிய பாசன சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இளையான்குடி பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ளது. அதனடிப்படையில் கண்மாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு  நிதி ஒதுக்கப்பட்டது. இளையான்குடி ரூ.70 லட்சம், விசவனூர் ரூ.70 லட்சம், கச்சாத்தநல்லூர் ரூ.45 லட்சம், புலியூர் ரூ.39 லட்சம், அண்டக்குடி ரூ.60லட்சம், கீழாயூர், மேலாயூர் ரூ.70 லட்சம், சிறுவூர் ரூ.31 லட்சம், திருவள்ளூர் ரூ.70 லட்சம், பஞ்சனூர் ரூ.40 லட்சம், நகரகுடி ரூ.55 லட்சம் மதிப்பில்நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே பழைய விவசாய சங்கங்களுக்கு வேலை ஒதுக்க வேண்டும் என, விவசாயிகள் சார்பில் கடந்த வாரம் மாவட்டட கலெக்டர் ஜெயகாந்தனிடம்  புகார் அளிக்கப்பட்டது. அதனால் தேர்தல் முறையில் தேர்ந்தெடுத்து பணிகளை ஒதுக்க வேண்டும் என கலெக்டர் ஜெயகாந்தன் சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று  முன்தினம் தேர்தல் நடைபெற இருந்தது. அதற்காக இளையான்குடி, கொங்கம்பட்டி, இடையவலசை, இந்திரா நகர், காந்திசாலை, சீத்தூரணி, கல்லூரணி, பகைவரைவென்றான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நஞ்சை நில பட்டாதாரர்கள்  பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குவிந்திருந்தனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் இல்லாததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு நீண்ட நேரம் காத்திருந்தனர். அதன்பிறகு வந்த செயற்பொறியாளர் மலர்விழி,  இன்ஸ்பெக்டர் பழனிமுத்து ஆகியோரின் ஆலோசனைபடி, தாசில்தர் பாலகுரு  நாளை(24.07.19) காலை இளையான்குடி  டாக்டர் சாகிர்உசேன் கல்லூரியில் அறிவித்தபடி தேர்தல் நடைபெறும் என விவசாயிகளிடம் உறுதியளித்தார். அதன்பிறகு பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பழைய பாசன விவசாயிகள் கலைந்து சென்றனர்.
ஆனால், நேற்று புதிய விவசாய சங்கத்தைச் சேர்ந்த  பாசன விவசாயிகள் எங்களுக்கும் குடிமராமத்து பணி வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட கிராம விவசாயிகளுடன் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த தாசில்தர் பாலகுரு இரண்டு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் சமாதான கூட்டம் ஏற்படுத்தி தீர்வு காணப்படும் என்று கூறியதால், முற்றுகையிட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர்.  விவசாயிகளுடன் சேர்ந்து பழைய, மற்றும் புதிய விவசாய சங்கங்கள் சார்பில் மாறி மாறி  பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட முற்றுகை போராட்டத்தால், அப்பகுதி கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக காணப்பட்டது. அரசு இயந்திரத்தின் நிர்வாகச் சீர்கேட்டால் விவசாயிகள் மத்தியில் மோதல் போக்கு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED சிறந்த திருநங்கை விருதுக்கு விண்ணப்பம்