திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் சரிவு கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

உடுமலை ஜூலை 18:  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக 14 அடி அளவிலேயே நீடிக்கிறது. இதனால் இந்த அணையை நம்பியுள்ள விவசாயிகள் சோகமடைந்துள்ளனர். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அணையின் மூலம் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள் நான்கு மண்டலமாக சுழற்சி முறையில் திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் பெற்று வருகின்றன. மூன்றாம் மண்டல பாசனத்திற்கு கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை தண்ணீர் திறக்கப்பட்டது. நான்காம் மண்டல பாசனத்திற்கு ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் 60 அடி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக 14 அடி அளவிலேயே நீடிக்கிறது. இதனால் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.பிஏபி பாசனத் திட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சோலையாறு,பரம்பிக்குளம்,பெருவாரிப்பள்ளம்,ஆழியார் சர்க்கார்பதி உள்ளிட்ட பகுதிகளில் பருவ மழை பொய்த்ததால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரத்து அறவே நின்று போனது. சர்க்கார்பதி பவர்ஹவுசில் இருந்து 46 கிலோ மீட்டர் காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பருவமழை இந்த வருடம் இதுவரை துவங்காததால் வனப்பகுதிகளில் மட்டுமின்றி சமவெளிப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

 மேலும் உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிணறு,ஆறு,குளங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது.நடப்பு பருவத்தின் போது 75 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் நான்காம் மண்டல பாசனத் தண்ணீர் திறப்பிற்காக காத்திருக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் தென்னை பயிரிட்டு இருந்தனர். தற்போது தற்போது தென்னையை காப்பாற்ற விலை கொடுத்து தண்ணீர் வாங்கி தோட்டத்திற்கு பாய்ச்சி வருகின்றனர். வெங்காயம், தக்காளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்ட விவசாயிகள் மழையின்மை காரணமாக நடப்பாண்டில் காய்கறி பயிரிட இதுவரை முன்வரவில்லை.  இதன் காரணமாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. அணையில் தொடர்ந்து தண்ணீர் குறைந்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் சோகமடைந்துள்ளனர். மேலும் திருமூர்த்தி அணையிலிருந்து நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெற்று வருகிறது. தொடர்ந்து பருவமழை ஏமாற்றும் பட்சத்தில் திருப்பூர் மற்றும் உடுமலை பகுதிகளில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட
வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

Tags :
× RELATED கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்