×

படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள வயல்களில் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

புதுக்கோட்டை, ஜூலை 18: புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதல் குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கந்தர்வகோட்டை மற்றும் திருவரங்குளம் வட்டாரங்களில் களஆய்வு செய்து படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்திட ஆலோசனை வழங்கினர். இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் சுப்பையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மக்காச்சோளப்பயிரில் அமெரிக்கன் படைப்புழுவின் தாக்குதல் மாநிலம் முழுவதும் பரவலாக தென்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளப்பயிரில் படைப்புழுவின் தாக்குதல் கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, திருவரங்குளம், அரிமளம், புதுக்கோட்டை வட்டாரங்களில் பரவலாக தென்படுகிறது. இதுகுறித்து வயல் ஆய்வு செய்திட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் பிரபாகரன், கோயம்புத்தூர் வேளாண் கல்லூரி பூச்சியியல் துறைத் தலைவர் சாத்தையா, படைப்புழு முதன்மை விஞ்ஞானி முத்துகிருஷ்ணன், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி பூச்சியியல் உதவி பேராசிரியர் சுகன்யா கண்ணன், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ராஜசேகரன் ஆகியோர் அடங்கிய குழு நேற்று கந்தர்வகோட்டை வட்டாரத்தில் துருசுப்பட்டி கிராமத்திலும், திருவரங்குளம் வட்டாரத்தில் கொத்தக்கோட்டை கிராமத்திலும் வயல் ஆய்வு செய்தனர்.

மேலும் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்திட பெவேரியா பேசியானா என்ற பூஞ்சான உயிர் மருந்தினைக் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைத்தல், அடி உழவில் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட்டு உழவு செய்தல், எக்டருக்கு 20 எண்கள் இனக்கவர்ச்சிப் பொறி வைத்து ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழித்தல், விதைக்கும்போது 10 வரிசைக்கு ஒரு வரிசை இடைவெளி விட்டு விதைத்தல், விளக்குப் பொறி வைத்து கண்காணித்தல், வரப்பு பயிராக எள், தட்டைப்பயறு, சூரியகாந்தி, தீவனச்சோளம் போன்றவற்றை பயிரிடுதல், தேவைப்படும்போது பரிந்துரை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளான எமாமெக்டின் பென்சோயேட் 10 லிட்டர் தண்ணீரில் 4 கிராம் அல்லது ஸ்பைனிடோரம் 10 லிட்டர் தண்ணீரில் 5 மிலி அல்லது குளோராடிரினிபிரோல் 10 லிட்டர் நீரில் 5 மிலி அளவில் கைத்தெளிப்பான கொண்டு குருத்தில் படுமாறு தெளிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.பின்பு நடைபெற்ற வேளாண் பூச்சி மருந்து விற்பனையாளர்கள் கூட்டத்தில் பூச்சி மருந்து விற்பனையாளர்கள் படைப்புழுவிற்கு என்று பரிந்துரை செய்யப்பட்ட தரமான பூச்சி மருந்துகளை மட்டும் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். இனக்கவர்ச்சிப் பொறிகளை தேவையான அளவு இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். படைப்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்திட முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. படைப்புழுத் தாக்குதல் மேலாண்மை முறைகள் குறித்து சிறு கண்காட்சி அமைக்கப்பட்டது.களஆய்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குனர்கள் சங்கரலட்சுமி, சக்திவேல் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ