×

அதிகபாரம் ஏற்றிய 15 வாகனங்கள் பறிமுதல்

மார்த்தாண்டம், ஜூலை 18: குமரி மாவட்டத்தில் அதிகபாரம் ஏற்றி வரும் வாகனங்களால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. வைக்கோல், மரத்தடிகள், பாறாங்கற்கள் என அதிக பாரம் ஏற்றி வரும் இந்த வாகனங்களில் பல அடி உயரத்திற்கு லோடு ஏற்றுகின்றனர். அதுபோல இருபுறமும் அதிக அகலத்திற்கு பாரம் வைக்கின்றனர். இப்படி ஏற்றி வரும் போது லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்களின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் சிவப்பு விளக்குகள் பொருத்த வேண்டும் என்ற விதி உள்ளது. இதன் மூலம் பின்னால் வரும் வாகனங்கள் முன்னெச்சரிக்கையாக வர முடியும், விபத்துக்களையும் தவிர்க்க முடியும்.
ஆனால் அதிகபாரம் ஏற்றி வரும் வாகனங்கள் இந்த விதிமுறையை கடைபிடிப்பதில்லை. குறிப்பாக இரவில் அதிகபாரத்துடன் வாகனங்கள் வரும்போது, பின்னால் வரும் வாகனங்கள் மிக நெருங்கி வரும்போதுதான் கூடுதல் பாரத்துடன் முன்னால் வாகனங்கள் செல்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அதுபோல சாலையின் ஓரங்கள் தெரியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். இந்த விபத்துக்களால் அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே அதிகபாரம் ஏற்றிவரும் வாகனங்களை கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக 2 தினங்களுக்கு முன் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இந்நிலையில், மார்த்தாண்டம் வட்டார ேபாக்குவரத்து அலுவலர் பழனிசாமி, வாகன ஆய்வாளர் சத்தியகுமார் உள்பட அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை கருங்கல், குலசேகரம், புதுக்கடை, தொலையாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் விடியவிடிய வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 12 லாரிகள், 3 மினிலாரிகள் அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றில் சில வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை கோழிப்போர்விளையில் உள்ள மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இந்த வாகனங்களுக்கு ₹2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags :
× RELATED கண்டன்விளையில் பைக் விபத்தில் வாலிபர் படுகாயம்