×

அறந்தாங்கி காவிரிபாசன பகுதியில் மழையை பயன்படுத்தி புழுதி உழவு பணி துவக்கம்

அறந்தாங்கி, ஜூலை 16: அறந்தாங்கி காவிரிப்பாசன பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் வயல்களில் புழுதி உழவு செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.அறந்தாங்கி காவிரி பாசன பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு பெய்த மழை மற்றும் காவிரி நீரை பயன்படுத்தி, சுமார் 75 சதவீதம் நிலங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். சில ஆண்டுகளுக்கு பிறகு சாகுபடி செய்த போதிலும், ஏக்கருக்கு 21 மூடையே மகசூல் கிடைத்ததால், விவசாயிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் அறந்தாங்கி காவிரி பாசனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழைபெய்தது. இந்த மழையால், வயல்களின் மேல் பகுதியில் லேசாக ஈரம் உள்ளதால் இந்த ஈரத்தை பயன்படுத்தி விவசாயிகள் புழுதி உழவு செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். இதுகுறித்து இடையாத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி யுவகைலாஷ் கூறியதாவது:அறந்தாங்கி பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் பெரும்பாலான வயல்களில் புழுதி உழவு செய்யும் அளவிற்கு ஈரம் உள்ளது. வயலில் இருக்கும் ஈரத்தை பயன்படுத்தி, டிராக்டர் மூலம் புழுதி உழவு செய்து வருகிறோம். பல ஆண்டுகளாக அறந்தாங்கி காவிரி பாசன விவசாயிகள் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வருகிறோம். எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு தேவையான மானிய உதவிகளை செய்து தர வேண்டும் என்று கூறினார்.அறந்தாங்கி காவிரி பாசன பகுதிகளில் தற்போது ஒரு சில பகுதிகளில் புழுதி உழவு செய்யும் பணி நடந்து வருகிறது. இன்னும் சில நாட்கள் மழை பெய்யும் நிலையில், அனைத்து பகுதிகளிலும் விவசாயப் பணிகள் சூடுபிடிக்கும்.


Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ