×

பழங்குடியினர் குறை தீர்ப்பு முகாம்

பந்தலூர், ஜூலை 16:பந்தலூர் அருகே குந்தலாடி அரசு ஆரம்ப பள்ளியில் பழங்குடியினர் விழிப்புணர்வு மற்றும் குறை தீர்ப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் வருவாய்த்துறை ஏற்பாடு செய்த இந்த முகாமிற்கு வக்கீல் கணேசன் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் வரவேற்றார்.வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, இணை செயலாளர் பொன் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் பழங்குடியினர்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்.

 இதையடுத்து  கோட்டாட்சியர் ராஜ்குமார் பேசியதாவது: தற்போது 21ம் நூற்றாண்டில் மக்கள் பங்கேற்புடன் மக்கள் திட்டங்கள் செயல்படுத்த படுகிறது. அரசு மக்களை தேடி செல்லும் நிலையில் மக்கள் சரியாக தங்கள் குறைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அரசு மூலம் பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் பழங்குடியினர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடுகள் இல்லாத ஆதிவாசிகளுக்கு வீடு கட்டி தர கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆதிவாசிகளுக்கு வீடுகள் கட்டுவதில் பணம் பிரச்னையாக இருப்பதால், ஒப்பந்ததரர்கள் மூலம் வீடுகள் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

 மேலும் குடிநீர் தேவைக்கு ரூ.1.50 கோடி நிதி நீலகிரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குடிநீர் பிரச்னைகளுக்கு உள்ளாட்சிகள் மூலம் தீர்வு காணப்படும். தற்போது வனத்துறையில் 99 காலிப்பணியிடங்களை பழங்குடியினருக்கு ஒதுக்கி உள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கூடலூரில் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதை ஆதிவாசி மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
 இதையடுத்து உப்பட்டி தொழிற்பயிற்சி மைய பயிற்றுனர் கனகசுந்தரம் தொழிற்பயிற்சிகள் குறித்து பேசினார்.இதில் நெலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் அசோக், நிர்வாகிகள் மற்றும் குந்தலாடி, ஒர்க்கடவு, தானிமூலா, பழையூர், கடலைகொல்லி, மங்கம்வயல், புத்தூர்வயல், அம்பலபாடி, குன்றிகடவு, நெல்லியாளம் உட்பட கிராம ஆதிவாசி மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பாலன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ