மஞ்சூர் - ஊட்டி சாலையில் காட்டெருமை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிப்பு

மஞ்சூர், ஜூலை 16:மஞ்சூர்-ஊட்டி சாலையில் காட்டெருமைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.   மஞ்சூர் அருகே உள்ள மெரிலேண்டு, மைனலாமட்டம், கிட்டட்டிமட்டம், பெங்கால்மட்டம், சாம்ராஜ் எஸ்டேட் சுற்றுபுற பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் உலா வரும் காட்டெருமைகள், தேயிலை தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபடுவதால் தோட்ட தொழிலாளர்கள் இலை பறிக்க செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அது மட்டுமின்றி சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக சென்று வரும் வாகனங்களை வழிமறிப்பதும் வாடிக்கையாக உள்ளது.  இந்நிலையில் நேற்று காலை மஞ்சூர் -ஊட்டி சாலையில் தேவர்சோலை அருகே 10க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் நடுரோட்டில் வழியை மறித்தபடி நின்று கொண்டிருந்தது.

 இதனால் மஞ்சூர் - ஊட்டி பகுதிகளில் வந்த அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல வழியின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக காட்டெருமைகள் சாலையை மறித்ததால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.இதை தொடர்ந்து காட்டெருமைகள் ஒவ்வொன்றாக அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் இறங்கி சென்றது. அதன் பிறகே வாகனங்கள் புறப்பட்டு சென்றது. காட்டெருமைகள் வழிமறிப்பால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED மாவட்டத்தில் தேர்தல் நடக்கும்...