×

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் பற்றி விசாரிக்க வேண்டும்

நாமக்கல், ஜூலை 16: ராசிபுரம் அடுத்த காக்காவேரி ஊராட்சியில் நூறுநாள் வேலை திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை அதிகாரிகள் விசாரிக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.ராசிபுரம் தாலுகா காக்காவேரி ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள், கலெக்டர் ஆசியா மரியத்திடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காக்காவேரி ஊராட்சியில், தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், கடந்த சில மாதங்களாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கியுள்ளனர். அதே சமயம், அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் 100 நாட்கள் வேலை கொடுத்துள்ளனர். சிலருக்கு வேலையே தராமல், அவர்கள் வேலை செய்ததாக அட்டையில் பதிவு செய்து, அதற்கான சம்பள பணத்தை எடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை எதிர்த்து கேட்டால், தொடர்ந்து வேலை கொடுக்க மாட்டார்கள் என்று  பயந்து, அவர்களுக்கு உடந்தையாக தவறு செய்து விட்டோம். கழிப்பிட கட்டிடம்,  உறிஞ்சு குழி ஆகிய பணிகள் அனைத்திலும்  ஊழல் நடந்துள்ளது.

இதுகுறித்து கடந்த 28ம் தேதி நடந்த கிராமசபை  கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில்,  ஊராட்சி திட்ட பணியாளராக இருந்த தமிழ்ச்செல்வி, சௌந்தரவல்லி, தவமணி மற்றும்  இளவரசி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, அதிகாரிகள் உரிய விசாரணை  நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். அதேபோல், பள்ளிபாளையம் அலமேடு காளியம்மாள் லைன் பகுதியை சேர்ந்தவர்கள், கலெக்டர் ஆசியா மரியத்திடம் வழங்கிய மனுவில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். கூலி வேலை செய்யும் எங்களுக்கு சொந்தமாக நிலமோ, வீடோ கிடையாது. வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். விலைவாசி அதிகரிப்பால், எங்களால் வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, எங்கள் பகுதியில் உள்ள 20 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, பள்ளிபாளையம் பகுதியில் இலவசமாக வீட்டுமனை ஒதுக்கித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ₹5 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்