×

சாதி சான்று வழங்கக் கோரி பள்ளிப்பட்டு வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு

பள்ளிப்பட்டு, ஜூலை 16: சாதி சான்று வழங்கக் கோரி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளிப்பட்டு வட்டாட்சியரிடம் நேற்று மனு வழங்கினர். பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பாண்டறவேடு, பெருமாநல்லூர், ராமச்சந்திராபுரம், கீழப்பூடி, மேலப்பூடி, சொரக்காய்பேட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் கொண்டாரெட்டி இன மக்களுக்கு பழங்குடி இன மக்கள் (எஸ்.டி) சான்று பெற்று பலர் மத்திய, மாநில அரசுப் பணியில் உள்ளனர். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளுக்கு பின்பு வருவாய்த்துறை இப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர்களுக்கு எஸ்.டி.சான்று வழங்குவதை தடை செய்தது. இதனால், ஜாதி சான்று பெற முடியாமல் கல்வி, வேலை வாய்ப்பு பெற முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று 200க்கும் மேற்பட்டோர் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து சாதி சான்று கோரி வட்டாட்சியர்  மீனாவிடம் விருப்ப மனு வழங்கினர். தங்களுக்கு பழங்குடி இனச்சான்று வழங்கக் கோரி கடந்த 2018ல் நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் மனு வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால்  தங்கள் குழந்தைகள் கல்வி கற்க, வேலை வாய்ப்பு பெற முடியாமல் அவதிப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்தனர். பொதுமக்கள் மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் மீனா உறுதி கூறினார்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...