×

மேலூரில் மரங்களுக்கு தீ வைக்கும் ‘குடிமகன்கள்’

மேலூர், ஜூன் 27:மது போதையில் சுயநினைவை இழக்கும் குடிமகன்கள் மரங்களுக்கு தீ வைக்கும் அவலநிலை மேலூர் பகுதியில்
தொடர்கிறது.   டாஸ்மாக் பார்களில் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகம் என்பதால், மதுவை வாங்கும் பெரும்பாலன குடிமகன்கள் சாலை ஓரம், பாலத்தின் கீழ், மரத்தடி, சில சமயம் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளி வளாகம் என சென்று மதுவை அருந்துகின்றனர்.    மேலூர் அழகர்கோவில் ரோட்டில் மாத்திக்கண்மாய் கரை ஓரமாக பழமையான பல அரச மற்றும் ஆலமரங்கள் கிளை பரப்பி எப்போது பசுமையாக காணப்படும். இரவு நேரத்தில் இந்த மரத்தை சுற்றி அமர்ந்து மது அருந்துபவர்கள், கடைசியில் அந்த மரத்திற்கே தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர்.
  முதலில் ஒரு மரத்திற்கு தீ வைத்த இவர்கள் தற்போது இரண்டாவதாக ஒரு மரத்திற்கும் தீ வைத்துள்ளனர். இதனால் மரத்தின் பெரும் பகுதி கருகி பரிதாபமாக காணப்படுகிறது. மக்கள் கூறுகையில், பசுமை சாலை, 8 வழிச்சாலை என கூறி பல்லாயிரக்கணக்கான மரங்களை வெட்டி சாய்த்ததால், மழையின்றி தற்போது குடி நீருக்காக தவித்து வருகின்றோம். இந்நிலையில் இருக்கும் மரங்களை இது போல் அழித்தால் மழை எப்படி வரும், தண்ணீர் பஞ்சம் எப்படி தீரும். பொதுவாக இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் தினசரி ஈடுபட்டால் இது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது என்றனர்.

Tags :
× RELATED பேரையூர் அருகே கனமழைக்கு 6 ஏக்கர் வாழைகள் நாசம்: விவசாயிகள் வேதனை