×

கட்டுமாவடியில் குண்டும், குழியுமான உப்பள சாலையை சீரமைக்க வேண்டும்

அறந்தாங்கி, ஜூன்.26: புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் சேதமடைந்த உப்பளச் சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.கட்டுமாவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான உப்பளம் உள்ளது. இந்த உப்பளத்தில் இருந்து இருந்து உப்பு மூடைகளை கொண்டு செல்வதற்காக மத்திய அரசின் உப்பு வாரியத்தின் நிர்வாகத்தில் அமைக்கப்பட்டது உப்பளச் சாலை. இந்த சாலை வழியாக உப்பளம், அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காந்தி நகர், கீழக்குடியிருப்பு, ஹாஜியார் நகர் போன்ற பகுதிக்கு மாணவ, மாணவியர், பொதுமக்கள் சென்று வருகின்றனர். கட்டுமாவடியில் ஊருக்குள் செல்லும் சாலைகளில் முதன்மையானது உப்பளச் சாலையாகும்.

இந்த சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலையில் நடைபெறும் போக்குவரத்து காரணமாகவும், உப்பு காற்றினாலும் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. பல இடங்களில் சாலை குண்டும்-குழியுமாக உள்ளதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயப்படும் நிலை உள்ளது. இந்த சாலையில் செல்லும் கார் போன்ற வாகனங்களின் டயர்கள் பஞ்சர் ஆவதால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் மழைக்காலங்களில் மக்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலையில் தண்ணீர் தேங்குவதால், மாணவ, மாணவியர் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மக்களின் நலனுக்காகத்தான் அரசாங்கம் உள்ளது. அதை மறந்து மக்கள் அதிகம் பயன்படுத்தும், கட்டுமாவடி உப்பளச் சாலையை சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளது அப்பகுதி மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சேதமடைந்த கட்டுமாவடி உப்பளச்சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ