×

காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

நாமக்கல், ஜூன் 21: காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு நாமக்கல்லில் நடைபெற்ற முகாமில் மக்காச்சோள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் மற்றும் இடுபொருள் விற்பனையாளர்களுக்கான படைப்புழு தாக்குதல் மற்றும் கட்டுப்பாடு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்குநரக இயக்குநர் பிரபாகரன் தலைமை வகித்து பேசினார். கலெக்டர் ஆசியா மரியம் குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்து பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய பயிரான மக்காச்சோளப் பயிரில், படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. இப்புழுக்கள் ஒரு சில நாட்களிலேயே பயிரின் முக்கிய பகுதிகளை முழுமையாக சாப்பிடக்கூடியவை. படைப்புழுக்களை கட்டுப்படுத்த, வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நேரடியாக விவசாயிகளை சந்தித்து ஆலோசனைகளை கூறி வருகின்றனர். இதுதொடர்பாக, நாமக்கல் மாவட்டத்தில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் சாத்தையா, மக்காச்சோளப் படைப்புழுவின் வாழ்க்கை சுழற்சி, தாக்குதல் அறிகுறிகள் மற்றும் பாதிப்பு விவரங்களை எடுத்துக் கூறினார். பூச்சியியல் துறை பேராசிரியர் முத்துகிருஷ்ணன், படைப்புழுவினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். நாமக்கல், வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் முருகன், இயற்கை வழி முறைகளை பின்பற்றி படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் வயல் சூழல் ஆய்வு குறித்து விளக்கினார்.

மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் அனைவரும், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பங்கேற்று பயன்பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. முகாமில் வேளாண்மை இணை இயக்குநர், சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயலட்சுமி, வேளாண்மை துணை இயக்குநர் அசோகன், வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், அனைத்து வட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ₹5 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்