×

வீடுகளுக்கு முன்பு குளம்போல் தேங்கிய சாக்கடை கழிவு நீர்

திருப்பூர், ஜூன் 21: திருப்பூர் மாநகராட்சி 11 வது வார்டுக்கு உட்பட்ட செல்லம்மாள் காலனி, அரிசிக்கடை வீதி, ஜீவா வீதி, விநாயகர்கோவில் வீதி, திருநீலகண்டர் வீதி ஆகிய பகுதிகளில் அடிக்கடி சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வீடுகளுக்கு முன்பு வழிந்தோடி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், அதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
 இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஜீவா வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, வீதி முழுவதும் வீடுகளுக்கு முன்பு சாக்கடை கழிவு நீர் குளம்போல் தேங்கி நின்றது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த 18ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று காலை மாநகர் நல அதிகாரி பூபதி, 1வது மண்டல உதவி கமிஷனர் வாசுக்குமார் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிக்கு நேரில் பார்வையிட சென்றனர்.
 அப்போது, அப்பகுதி மக்கள் திரண்டு அவர்களை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், சாக்கடை அடைப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல்...