×

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 250 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

ஊத்துக்கோட்டை, ஜூன் 21:தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் பயன்படுத்தவோ,  விற்பனை செய்யவோ கூடாது  என ஊத்துக்கோட்டை பேரூாட்சி தெரிவித்து இருந்தது. இதற்காக, விழிப்புணர்வு  பேரணி, பிரசாரம், கண்காட்சி மற்றும் வியாபாரிகளின்  ஆலோசனை கூட்டம்   என கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பேரூராட்சி சார்பில் நடத்தப்பட்டது. ஆனால், இதனையும் மீறி ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி விற்பனை செய்வதாக  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரிக்கு  தகவல் கிடைத்தது. இதையடுத்து பிளாஸ்டிக்  பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், மீறி பயன்படுத்தினால் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், நேற்றும், நேற்று முன்தினமும் ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு  தலைமையில்  தலைமை எழுத்தர் பங்கஜம்,  துப்புரவு மேற்பார்வையாளர் குமார் மற்றும் ஊழியர்கள் முருகவேல், வெங்கடேசன்,  முனிச்சந்திரசேகர், கோபி, சீனிவாசன் ஆகியோர் நேரு பஜார், திருவள்ளூர் சாலை, நாகலாபுரம் சாலை, சத்தியவேடு சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அபபோது மளிகை கடை, துணிகடை, பூக்கடை, டீ கடை, பழக்கடை ஆகிய கடைகளிலிருந்து 250 கிலோ  பிளாஸ்டிக் பொருட்களை  பறிமுதல் செய்தனர். மேலும், அதிக அளவில் பிளாஸ்டிக் பதுக்கி வைத்திருந்த கடைக்காரர்களுக்கு 2,600 அபராதம் விதித்தனர்.  மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ₹1 லட்சம் வரை அபராதம் விதித்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு எச்சரிக்கை விடுத்தார்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...