புதுக்கோட்டை மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் பற்றாக்குறை

புதுக்கோட்டை, ஜூன் 19: புதுக்கோட்டை மாவட்டத்தில் தீயணைப்பு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் வீரர்கள் பற்றாக்குறையால் விரைந்து தீயை அணைப்பது மற்றும் மீட்பு பணிகளில் தாமதமடைந்து வருகிறது. எனவே அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் போதிய தீயணைப்பு வீரர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு தீயணைப்பு மற்றும் மீட்புதுறை செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் புதுக்கோட்டை, கீரனூர், இலுப்பூர், ஆலங்குடி, திருமயம், கீரமங்கலம், பொன்னமராவதி, அறந்தாங்கி உள்ளிட்ட 13 இடங்களில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த பகுதிகளில் தீவிபத்துக்கள் நிகழ்ந்தால் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரைந்து வீரர்கள் சென்று தீயை அணைத்து பெரிய விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கப்படும். மேலும் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும்போதும் விபத்தில் சிக்கியவர்களையும் மீட்டு உயிர் சேதம் ஏற்பாடமால் வீர தீரசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரிய தீ விபத்து மற்றும் வெள்ள பெருக்கின்போது எப்படி மீட்பு பணியில் ஈடுபடுவது என மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தீயணைப்பு துறைக்கு ஒரு மாவட்ட அலுவலர் மற்றும் ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திற்கும் ஒரு நிலைய அலுவலர், தீயணைப்பு வீரர்கள் என 17 பேர் பணியில் இருக்க வேண்டும். இப்படி பல்வேறு நிலைகளில் பணிபுரியும் வீரர்கள் உட்பட மாவட்டம் முழுவதும் சுமார் 230 பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது தீயணைப்பு துறையில் வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவர் பார்க்க வேண்டிய பணிகளை ஒருவர் பார்க்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

மேலும் தீயணைப்பு வீரர்களுக்கு தேவையான நேரத்தில் விடுமுறை கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலில் பணியாற்றி வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் பற்றாக்குறையால் பெரிய அளவில் ஏற்படும் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதானல் தீயினால் ஏற்படும் சேதங்கள் அதிகரிக்கிறது. மேலும் உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.தீயணைப்பு துறை என்பது முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் மற்ற துறைகளில் ஆட்கள் பற்றாக்குறை இருந்தாலும் தீயணைப்பு துறையில் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அரசின் கடமையாகும்.ஆனால் பேரிடர் ஆபத்து ஏற்படும்போது அந்த ஆபத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் தீயணைப்பு துறையை ஏன் அரசு கண்டும் காணாமல் இருக்கிறது என்று தெரியவில்லை. பெரிய விபத்துகள் நடந்து பிறகு இழப்பீடு வழங்குவதை தவிர்த்து விபத்து ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். இதற்கு தீயணைப்பு துறையில் உள்ள வீரர்கள் பற்றாக்குறையை போக்க மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.Tags : firefighters ,Pudukkottai district ,
× RELATED பணியாளர்கள் பற்றாக்குறை மின்சாரம் கணக்கீடு பணிகள் பாதிப்பு