×

மாநகராட்சியானது ஆவடி நகராட்சி அடிப்படை கட்டமைப்பு வசதி விரைந்து நிறைவேற்றப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆவடி: தமிழகத்தில் 15வது மாநகராட்சியாக ஆவடியை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதனால் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து  உள்ளனர்.ஆவடி நகராட்சி 1970ம் ஆண்டு உருவானது. 65சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்குள்ள 48 வார்டுகளில் சுமார் 4.75லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகராட்சி பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை,  மிட்டினமல்லி, அண்ணனூர், கோவில்பாதாகை உள்ளிட்ட பகுதிகளில் 2700க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இந்திய ராணுவ பாதுகாப்பு துறைக்கு சொந்தமான ஆவடி டேங்க் பேக்டரி, படைத்துறையின் உடை தொழிற்சாலை, இந்திய விமான  படை, போர் ஊர்தி  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், மத்திய வாகன கிடங்கு, இன்ஜின் பேக்டரி,  மத்திய உணவு கழகம், தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், ரயில்வே தொழிற்சாலைகளும் உள்ளன. மேலும், இங்கு பழமை வாய்ந்த  ரயில் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், அரசு பொது மருத்துவமனை மற்றும் ஏராளமான  தனியார் பொறியியல் கல்லூரிகள் பள்ளிகள் உள்ளன.

பாதுகாப்பு துறை நிறுவனங்கள் உள்ள ஆவடியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இதனால் ஆவடி நகராட்சி தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவிலேயே முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நகராட்சியில் ஆண்டு  ஒன்றுக்கு ரூ.28 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்த நகராட்சிக்கு பிறகு உருவான பல உள்ளாட்சிகளில் பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக, ஆவடியை சுற்றியுள்ள ஊராட்சிகளில் கோடிக்கணக்கில் வருவாய் வருகிறது.  ஆவடியில் போதிய வருவாய் இல்லாததால் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர முடியவில்லை. எனவே, ஆவடி நகராட்சியின் எல்லைகளை விரிவுபடுத்தி மாநகராட்சியாக மாற்றி உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்துதர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை  மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் 15வது மாநகராட்சியாக ஆவடி நகராட்சியை தரம் உயர்த்தி தமிழக அரசு நேற்று மதியம் அரசாணை வெளியிட்டது. புதிதாக அறிவிக்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில், தற்போதைய நகராட்சியில் உள்ள 48 வார்டுகள்  கொண்ட பகுதிகள் மட்டும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த பல ஆண்டாக ஆவடி நகராட்சியில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளின்றி அவதிப்பட்டு வந்தோம். தற்போது, ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால்,  உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து ஆவடி நகர மக்கள் நீண்ட கால கனவு நிறைவேறி உள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இனிமேல், ஆவடி மாநகராட்சிக்கு மத்திய, மாநில அரசுகளின் கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் பட்சத்தில் நகர பகுதியில் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், பூங்கா, மேம்பாலங்கள் உள்பட பல்வேறு வசதிகள்  பெருமளவில்  நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திமுகவின் திட்டம் நிறைவேறியது
ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி நகராட்சிகள், திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் அயப்பாக்கம், கண்ணப்பாளையம், கருணாகரச்சேரி, நடுக்குத்தகை, சோராஞ்சேரி, அன்னம்பேடு, கொசவன்பாளையம், பாக்கம், நத்தம்பேடு, பொத்தூர்,  அரக்கம்பாக்கம், பாண்டேஸ்வரம், மோரை, வெள்ளானூர், பாலவேடு, ஆலத்தூர், கர்லபாக்கம், வெள்ளச்சேரி, பம்மதுகுளம் ஆகிய ஊராட்சிகளை சேர்த்து ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் இருந்தது.  இதற்கான விரிவாக்க ஆய்வுப் பணிகள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு எல்லைகள் நிர்ணயம் செய்து மாநகராட்சியாக உயர்த்தும் நிலை இருந்தது. இதன் பிறகு அதிமுக ஆட்சி வந்த பிறகு கிடப்பில் போடப்பட்டது.  ஆவடி நகராட்சிக்கு பிறகு உருவான நகராட்சிகள் கூட இன்று மாநகராட்சிகளாக மாறிவிட்டன. ஆனால், ஆவடி மட்டும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படவில்ல்லை தற்போது அந்த திட்டம் நிறைவேறியுள்ளது.

Tags : corporation ,Avadi Municipal Fundamental Framework Facility: Public Opportunity ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...