×

கஞ்சம்பட்டி சுற்றுவட்டார கிராமத்தில் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு

பொள்ளாச்சி, ஜூன் 19:    பொள்ளாச்சியில் கடந்த 2015ம் ஆண்டிற்கு முன்பு வரை தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, வடகிழக்கு பருவமழை என அடுத்தத்து பருவமழை தொடர்ந்து பெய்தது. இதனால் அந்நேரத்தில் கிராம பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல், குடிநீர் விநியோகம் ஓரளவு சீராக இருந்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தென்மேற்கு பருவமழைக்கு பின், வடகிழக்கு பருவமழை பொய்துள்ளது விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் ஆண்டிற்கு ஆண்டு வறட்சி தொடர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை பல மாதங்கள் பெய்தாலும், இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து மழையின்றி போனதுடன். கடந்த ஏப்ரல் மாதத்தில் சில நாட்கள் மட்டும் கோடை மழை பெய்து நின்றது. இதனால், கிராம பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு, பல கிராமங்களில் கடந்த மார்ச் மாதம் முதல் குடிநீர் தட்டுப்பாடு ஆரம்பித்தது.

 இருப்பினும், இந்த ஆண்டில்  இந்த மாதத்தில் (ஜூன்) பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை பெய்யாமல் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் இன்னும் குடிநீர் தட்டுப்பாடு என்பது மேலும் அதிகரித்துள்ளது. குடிப்பதற்கு தண்ணீரை தேடி மக்கள் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பலகிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால், போர்வெல்களில் தண்ணீர் இல்லாமலும், கிணறுகளும் வற்றியபடி உள்ளது.  இதில், தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சம்பட்டி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு என்பது தொடர்ந்து தலைவிரித்தாடுகிறது. இந்த ஊராட்சிக்குட்பட்ட கஞ்சம்பட்டி, அம்மயணூர், காசிபட்டிணம், நம்பியமுத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு, ம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்து பல மாதங்கள் கடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு கடந்த 5 மாதங்காளக குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டாலும் அந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லாமல் உப்பு தண்ணீராக உள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட நாட்களில் கிடைக்கின்ற அதிகபட்சமாக 5 குடம் தண்ணீரையும் குடிப்பதற்கு மட்டுமின்றி அத்தியாவசிய தேவைக்கும் பயன்படுத்த வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரிசன காலனி பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளர்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.

 கஞ்சம்பட்டி கிராமத்தில் உள்ள சுமார் 60அடி ஆழமுள்ள ஒரு கிணற்றில், எப்போதும் தண்ணீர் பாதியளவு இருக்கும். அவ்வப்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்போது, அந்த கிணற்றிலிருந்து போதுமான தண்ணீரை அப்பகுதி மக்கள் பெற்று வந்தனர். ஆனால் தற்போது அந்த கிணற்றில் தரையை தொட்டவாறு தண்ணீர் உள்ளது. அதனை  பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் மணிக்கணக்கில் காத்திருந்து கயிறுகட்டி  இழுத்து தண்ணீர் எடுத்து செல்கின்றனர். இப்படி, பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்த நிலையில், சில கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீரை விலைக்கு வாங்குவதாக வேதனையை ஏற்படுத்துகிறது. கிராம பகுதிகளில் குடிநீர்  தட்டுப்பாட்டை போக்க, உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினர் போதிய நடவடிக்கை மேற்கொண்டு, தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village ,Kunjampatti ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...