ரேஷனில் பொருட்கள் வாங்கியதாக செல்போனுக்கு வரும் எஸ்எம்எஸ் அதிர்ச்சியில் நுகர்வோர்கள்

காரைக்குடி, ஜூன் 14:  ரேசன் கடைகளில் இருந்து நுகர்வோர் செல்போனுக்கு பொருட்கள் வாங்கியதாக வரும் எஸ்.எம்.எஸ் நுகர்வோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் பாயிண்ட் ஆப் ஸ்கேல் கருவி மூலம் பொருட்கள் விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான கடை விற்பனையாளர்கள் பொருட்கள் வெளி மார்க்கெட்டில் விற்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இருந்தபோதும் பொருட்கள் குறைவை சமாளிக்கவும், சிலருக்கு கமிஷன் வழங்கவேண்டும் என்ற கட்டாயத்தில் பொருட்கள் வாங்காத கார்டுதார்களின் பெயரில் பதிவு செய்து பொருட்களை அபகரித்து கொள்கின்றனர். பின்னர் அவற்றை வெளிமார்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். பாயிண்ட் ஆப் கருவி மூலம் வாடிக்கையாளர்கள் செல்போனுக்கு பொருட்கள் வாங்கியதாக எஸ்எம்எஸ் வந்து விடுகிறது. இதனை பார்த்து தான் தங்களுக்கு வழங்க வேண்டிய பொருள் பணியாளர்களால் திருடப்பட்டது பின்னர் தெரிய வருகிறது. பொருட்கள் வாங்காத நிலையில் தங்களுடைய கார்டில் பொருட்கள் எடுக்கப்படுவதாக நிர்வாகத்துக்கு புகார் அளித்து வருகின்றனர். சமூக ஆர்வலர் வெங்கட் கூறுகையில், ‘முறைகேட்டை தவிர்க்கவே பாயிண்ட் ஆப் ஸ்கேல் கருவி விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் நுகர்வோர் பொருள் வாங்காதபோது அதனை பயன்படுத்தி போலியாக பில் போட்டு நூதன முறையில் பொருட்களை திருடுகின்றனர். அவ்வப்போது பொருட்கள் வாங்காமலேயே எஸ்எம்எஸ் வருவது வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’ என்றார்.

Tags : Consumers ,
× RELATED ஓமலூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்