×

எருமப்பட்டி கூட்டுறவு சங்க செயலாளர் லட்சக்கணக்கில் மோசடி

நாமக்கல்,  மே 25: நாமக்கல் அடுத்த எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும்  ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் வரவு-செலவு கணக்குகள்  முறையாக கையாளப்படாமல், லட்சக்கணக்கான ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட செயலாளர்  மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர்  புகார் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்  அடுத்துள்ள எருமப்பட்டியில்,  எஸ்.என்.241 எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பணியாளர் மற்றும் ஆசிரியர்கள்  கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் நடந்த லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு குறித்து, சங்க செயலாளரிடம்  சட்டப்படி  விசாரணை நடத்த வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்  மன்றத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் செல்வராசு, மண்டல இணை பதிவாளருக்கு புகார்  மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எஸ்.என்.241 எருமப்பட்டி ஊராட்சி  ஒன்றியத்தின் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய  சங்கத்தில், தகுதியற்றவர்களை உறுப்பினர்களாக சேர்த்து, அவர்களுக்கு கடன்  தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. சங்க உறுப்பினர்களுக்கு கடன் வழங்கியது, அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்தது, சங்க செயலாளர்  கடன் தவணை தொகையை ரொக்கமாக பெற்றுக்கொண்டு, வரவு வைத்துள்ளார்.

கடன் பெற்றவர்களின் சம்பளத்தில், முறையாக கடன் தவணை மற்றும் நிலுவைத் தொகையை பிடித்தம் செய்யப்படவில்லை. தவிர,  வசூலித்த பணத்தை தாமதமாக செலுத்தி வருகின்றனர். இந்த வகையில், வரவு-செலவில் கையாடல் செய்து பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளனர். எனவே, அதிகாரிகள்  நேரில் விசாரணை நடத்தி, கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள்,  கடன் தொகையை கட்டாமல் முறைகேட்டில்  ஈடுபட்ட அதிகாரிகள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Eruppanpatti Co-operative Society ,
× RELATED ₹5 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்