அனுமந்தராயன்கோட்டையில் கீழே கழிவுநீர்.. மேலே குடிநீர்... இப்படி வைக்கிறதுக்கு வைக்காமலே இருந்திருக்கலாம்

செம்பட்டி, மே 25: அனுமந்தராயன்கோட்டையில் கழிவுநீர் கால்வாய் மேல் குடிநீர் தொட்டியை வைத்துள்ளதால் கடும் துர்நாற்றத்திற்கிடையே தண்ணீர் பிடிக்க வேண்டிய அவலநிலை உள்ளது. ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்டது அனுமந்தராயன்கோட்டை. சுமார் 5000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள தேவாலயம் எதிர்புற தெரு மக்கள் தேவைக்காக சிறு மின்விசையுடன் தண்ணீர் தொட்டி வைத்துள்ளனர். இத்தொட்டி கழிவுநீர் கால்வாய் மீது வைக்கப்பட்டுள்ளது.

இந்த கால்வாயை முறையாக சுத்தம் செய்வதில்லை. இதனால் தண்ணீர பிடிக்க வரும் பெண்கள் கழிவுநீர் கடும் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் தண்ணீர் பிடிக்கும் இடத்தில் கழிவுநீர் கால்வாய் மீது குடங்களை வைப்பதற்கு மட்டும் சிமெண்ட் சிலாப்புகளை அமைத்து கொடுத்துள்ளனர். மற்ற இடங்களில் சிலாப்புகள் வைக்கவில்லை. இதனால் தண்ணீர் பிடிக்க வரும் பெண்கள் தடுமாறி கழிவுநீர் கால்வாயில் விழுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அப்பகுதி பெண்கள் கூறுகையில், ‘தேவாலயம் எதிர் தெருவில் தண்ணீர் தொட்டியை கடமைக்கு வைத்து சென்று விட்டனர். இதை வைக்கிறதுக்கு வைக்காமலே இருந்திருக்கலாம். கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து பல வாரங்களாகி விட்டது. இதனால் அங்கிருந்து கிளம்பும் துர்நாற்றம் தாங்க முடியவில்லை. மூக்கை பிடித்து கொண்டே நிற்க வேண்டிய அவலம் உள்ளது. குடம் வைப்பதற்கு மட்டும் சிலாப் வைத்து சென்று விட்டனர்.

ஆட்கள் நிற்க சிலாப் வைக்கவில்லை. இதனால் தினமும் குறைந்தது 2 பேர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுகின்றனர். எனவே அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாயை முறையாக சுத்தம் செய்வதுடன், தண்ணீர் பிடிக்க நிற்கவும் சிமெண்ட் சிலாப்புகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED சிவகங்கை ஜிஹெச் மருத்துவ கழிவுகள், கழிவுநீரால் சுகாதாரக்கேடு