×

போலீஸ் ஸ்டேஷனில் ஜாமீனில் கையெழுத்திட்டு வந்த வாலிபர் சரமாரி வெட்டி கொலை 2 பேர் படுகாயம்

சிவகங்கை, மே 23: சிவகங்கை அருகே போலீஸ் ஸ்டேசனில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வந்த வாலிபர் கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவருடன் வந்த 2 பேர் காயமடைந்தனர். மானாமதுரை அருகே மேலப்பிடவூர் கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன்(எ)ஈஸ்வரன்(21). இவர் கடந்த ஏப்.5ல் சிவகங்கை அருகே வேலங்குளம் கிராமத்தை சேர்ந்த பிரியதர்சன் என்பவரை வாய்த்தகராறில் கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய சிவகங்கை தாலுகா போலீசார் புவனேஸ்வரன்(எ)ஈஸ்வரன் உள்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்தவழக்கில் சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்து போடவேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் பெற்றனர். இதையடுத்து நேற்று சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்து போட்டுவிட்டு புவனேஸ்வரன்(எ)ஈஸ்வரன், சூர்யா, கார்த்திக் ஆகியோர் ஒரு டூவீலரிலும் மற்றவர்கள் மற்றொரு டூவீலரிலும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

மறக்குளம் அருகே வந்த போது முள்காட்டில் மறைந்திருந்த ஒரு கும்பல் புவனேஸ்வரன் வந்த டூவீலரை மறித்தனர். அவர்கள் மூன்று பேரையும் அரிவாளால் வெட்டினர். இதையடுத்து மூவரும் அருகிலுள்ள வயல் வழியே தப்பியோடினர். அவர்களை துரத்தி சென்ற கும்பல் புவனேஸ்வரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. மற்ற இருவரும் காயங்களுடன் தப்பினர். தகவல் அறிந்த புவனேஸ்வரனின் உறவினர்கள் அங்கு குவிந்தனர்.

அவர்கள் கொலையாளிகளை கைது செய்யக் கோரி உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலை குறித்து அறிந்த சிலர் சிவகங்கை அருகே சாத்தரன்கோட்டையில் உள்ள சில கடைகளை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Tags : persons ,police boss ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...