×

சூறைக்காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்தன திருப்புவனம் அருகே நீரின்றி விவசாயம் கடும் பாதிப்பு

திருப்புவனம், மே 21:  திருப்புவனம் அருகே சூறைக்காற்றால் மின்கம்பங்கள் முறிந்ததால் , தண்ணீர் பாய்ச்ச வழியின்றி வாழை,வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள்  தவித்து வருகின்றனர்.திருப்புவனம் அருகே வலையனேந்தல் பகுதியில்  கடந்த வாரம் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில்  நான்கு மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் இப்பகுதியில் உள்ள 4ம் நம்பர் டிரான்ஸ்பார்மரும் பழுதானது. இதனால் வலையனேந்தல் பகுதியில் சுமார் நூற்றுக்குமேற்பட்ட விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை,வெற்றிலைக் கொடிக்கால் மற்றும் தென்னந்தோப்பு அனைத்தும் தண்ணீரின்றி தவிக்கின்றன.

கிணற்றுப் பாசனத்தை நம்பி இருக்கின்ற நிலையில் கடந்த ஒருவாரமாக 15க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் மின்சாரமின்றி பாசனத்துக்கு தண்ணீர் இன்றி வாழை மற்றும் வெற்றிலைக் கொடிகள் வாடியும் வதங்கியும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், `` முறிந்த மின் கம்பங்கள் அகற்றுவது குறித்தும் புதிய கம்பங்கள் நடுவது குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது’’ என்றனர். விவசாயிகள் கூறுகையில்,`` உடைந்த மின் கம்பங்களுக்கு பதில் அவசர கதியில்  புதிய மின் கம்பங்கள் நட்டு விரைவில் மின் இணைப்பு வழங்கினால் தான் நூற்றுக்கும் மேற்பட்ட பாசன நிலங்களை பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியும்’’ என தெரிவித்தனர்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...