மணப்பாறை, மே 3: மணப்பாறை அருகே உணவு, தண்ணீரின்றி உயிரிழக்கும் மயில்களை காப்பாற்ற தினந்தோறும், தண்ணீர் மற்றும் உணவை கிராமத்தினர் வழங்கி வருகின்றனர். மேலும் மயில்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்க அரசுக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மணப்பாறை அருகேயுள்ள கீழ பொய்கைப்பட்டியில் அமைந்துள்ளது பொய்கை மலை. பஞ்சபாண்டவர்களின் 12 வருட வனவாச காலங்களில் நான்காவது வருடம் இந்த பொய்கை மலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆகையால் இம்மலைக்கு நான்காவது வன நச்சு பொய்கை என்ற மற்றொரு பெயர் உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மலையின் வனப்பகுதியில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட வன மான இந்த பொய்கை மலையில், நம் நாட்டின் தேசிய பறவையாக அழைக்கப்படும் மயில் இனங்கள் இம்மலையில் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக வனப்பகுதியில் போதுமான உணவும், தண்ணீரும் இன்றி மயில்கள் மலையை விட்டு வெளியேற தொடங்கின. அப்படி உணவுக்காக வெளியேறும் மயில்கள் கிராமப்புறங்களையும், வயல்களையும் தாண்டி சாலைகளை கடக்கும்போது வாகனங்களாலும், மற்ற பிராணிகளாலும் அவ்வப்போது ஆபத்துகள் நேரிடுகிறது.
இதனால் ஒருசில மயில்கள் இறந்தும் விடுகின்றன. அதுமட்டுமின்றி போதிய உணவு, தண்ணீர் இல்லாமலும் அழிந்துவரும் மயில் இனங்களை கண்டு பரிதாபப்பட்ட கீழ பொய்கைப்பட்டி இளைஞர்கள் மற்றும் அப்பகுதி கிராமத்தினர் முயற்சியால், காலை, மாலை என இரு வேளைகளில் நெல், சோளம், கம்பு உள்ளிட்ட உணவு தானியங்களை மயில்களுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் குடிநீருக்காக தண்ணீரை விலை கொடுத்து வாங்கி அதனை ஒரு தொட்டியில் சேமித்து அவ்வப்போது மயில்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அத்துடன் மயில்கள் நடமாடும் பகுதியிலேயே சின்ன, சின்ன பீங்கான்களில் தண்ணீரை ஊற்றி வைத்துள்ளனர். மனிதன் குடிப்பதற்கே தண்ணீரின்றி திண்டாடும் இத்தருணத்தில் நம் தேசிய பறவையான மயில்களை காப்பாற்ற விலை கொடுத்து தண்ணீரையும், உணவு தானியங்களையும் வாங்கி மயில்களுக்கு வழங்கி வரும் இக்கிராமத்தினரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அத்துடன், அரசு மற்றும் வனத்துறை நிர்வாகம் வரும் காலங்களில் தேசிய பறவையான மயில் இனங்களை காப்பாற்ற இப்பகுதியில் சரணாலயம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் இப்பகுதி மக்கள் அழுத்தமாக எழுப்பி வருகின்றனர்.
