×

புதுகை மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுக்கோட்டை, ஏப்.26:   புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி  பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான மாணவர்  சேர்க்கை  கடந்த 22ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு  செய்யப்பட்டு வருகிறது.  இதுகுறித்து கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:    குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்  2019-20ம் கல்வி ஆண்டின் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான மாணவர்  சேர்க்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி  பள்ளிகளில் கடந்த 22ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு  செய்யப்பட்டு வருகிறது. இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற  மே 18ம் தேதி ஆகும். சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகள்  தொடக்க நிலை வகுப்புகள் எல்.கே.ஜி அல்லது 1ம் வகுப்பில் மாணவர்களை  சேர்க்க ஏதுவாக மொத்த இடங்களில் 25 சதவீதம் விழுக்காடு ஆன்லைன் மூலம்  நிரப்புவதற்கு  பள்ளியின் தகவல் பலகையில் அறிவிப்பு செய்ய வேண்டும்.  எல்.கே.ஜி சேர்க்கைக்கு வரும் ஜூலை 31ம் தேதி  மாணவரின் வயது 3  முடிவடைந்திருக்க வேண்டும்.

1ம் வகுப்பு சேர்க்கைக்கு  31.7.2019ம் தேதி மாணவரின் வயது 5 முடிவடைந்திருக்க வேண்டும்.  வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவின் கீழ் விண்ணப்பிக்க மாணவர்கள்  பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லிம்), மிகவும்  பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும்  பழங்குடியினராக இருக்க வேண்டும். வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினராக  இருந்தால் ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளியாக இருக்கும் குழந்தை, மூன்றாம்  பாலினத்தவர், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தை, துப்புரவு தொழிலாளியின்  குழந்தையாக இருக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பிக்கும் போது உரிய  அலுவலரால் வழங்கப்பட்ட சான்றினை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆண்டு வருமானம்  ரூ.2 லட்சத்துக்கும் கீழ் பெறும் அனைத்து பிரிவினரும் நலிவடைந்த  பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதன் பொருட்டு பெற்றோரின் ஆண்டு வருமான  சான்று சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் பெற்று பதிவேற்றம் செய்யப்பட  வேண்டும்.  எனவே பெற்றோர்கள் சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்  மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினரின் குழந்தைகளை தாங்கள்  வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி  பள்ளிகளில் இருப்பிட சான்று, குழந்தையின் புகைப்பட சான்று, ஆதார் அட்டை  அல்லது குடும்ப அட்டை,பிறப்பு சான்று, சாதி சான்றினை அளித்து எல்.கே.ஜி  வகுப்புகளில் சேர்க்கலாம் அல்லது பள்ளி கல்வி துறையின்  ttp://rte.tnschool.gov.in/tamilnadu என்ற இணைய  தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு எவ்வித கல்வி கட்டணமும் தனியார்  பள்ளிகள் மாணவர்களிடம் பெறமாட்டார்கள். எனவே இந்த நல்ல வாய்ப்பினை  பெற்றோர்கள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Tags : self-financing schools ,district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...