×

ஆடு அடிச்சாலைக்கு செல்லாமல் நோய் பாதிப்பு ஆடுகளை வெட்டுவது அதிகரிப்பு

ராமநாதபுரம், ஏப். 25: ஆடு அடிச்சாலை பராமரிப்பின்றி இருப்பதாக கூறி இறைச்சி கடைக்காரர்கள் புறக்கணிப்பதால் ஆடுகள் இறைச்சி கடைகளிலேயே வெட்டப்பட்டு வருகின்றன. நோய் வாய்ப்பட்ட ஆடுகளை வெட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் இறைச்சிக்கடை விற்பனையாளர்கள் ஆடுகளை வெட்டுவதற்கு முன்பாக ஆடு அடிச்சாலைக்கு கொண்டு வந்து மருத்துவரின் முன்னிலையில் காண்பிக்க வேண்டும். அதன்பின்னர் தான் ஆடுகளை வெட்ட வேண்டும். நோய் தாக்கிய ஆடுகளை அங்கு வெட்டுவதற்கு அனுமதி கிடையாது. வெட்டப்பட்ட ஆடுகளுக்கு நகராட்சியின் சீல் வைக்கப்படும். அதன்பின்னரே ஆடுகளை வெட்ட அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில் தற்போது சில கடைக்காரர்கள் தங்களது இடத்திலேயே ஆடுகளை வெட்டிக் கொள்கின்றனர். இதனால் இறந்துபோன, நோய்வாய்ப்பட்ட ஆடுகளையும் கலந்து இறைச்சி கடைக்காரர்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. நோய்வாய்ப்பட்ட ஆடுகளை பொதுமக்கள் சாப்பிடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுத்து இறைச்சி கடைக்காரர்களை அவர்களது இடத்தில் வெட்ட அனுமதி அளிக்க கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘தற்போது ஆட்டி இறைச்சியின் விலை அதிகபட்சமாக கிலோ ரூ.400 வரை விற்கப்படுகிறது. இதுதவிர ரத்தம், தலை, குடல் என தனித்தனியாக ஒவ்வொரு விலைக்கு விற்கப்படுவதால் நாளுக்கு நாள் இறைச்சி கடை உரிமையாளர்கள் பெருகி வருகின்றன. விலை கூடுதல் காரணமாக பலர் நோய்வாய்ப்பட்ட ஆடுகளை குறைந்த விலைக்கு வாங்கி அதை வெட்டி கூடுதல் விலைக்கு பொதுமக்களிடம் விற்பனை செய்கின்றனர். இதனால் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்புள்ளது. அதிகாரிகள் ஆடு அடிச்சாலையை முறையாக பராமரிக்க வேண்டும். அங்கு வந்தே ஆடுகளை வெட்ட இறைச்சிக் கடைகாரர்களிடம் வலியுறுத்த வேண்டும்’’ என்று கூறினர்.

Tags :
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு