×

சூறாவளிக்கு ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம் அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை இடையூராக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்

விருதுநகர், ஏப். 24: விருதுநகர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுக்கு பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து நாசமாகின. இதனால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 1,020 கண்மாய்கள் வற்றி வறண்டு கிடக்கும் நிலையில், நிலத்தடி நீர்மட்டம் 300 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. ஒரு சில விவசாய கிணறுகளில் இருக்கும் நீரை கொண்டு விவசாயம் நடைபெற்று வருகிறது.  பருவமழை பொய்த்து போன நிலையில், கோடைமழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென விருதுநகர் பகுதியில் கரும் மேகங்கள் சூழ்ந்தன. சூறைக்காற்று சுழன்று வீசிய நிலையில் மர கிளைகள் சாலைகளிலும், மின்கம்பங்களிலும் ஒடிந்து விழுந்தன. இதனிடையே, விருதுநகர் அருகே சோளகவுண்டன்பட்டி கிராமத்தில் குருசாமியின் தோட்டத்தில் குலை தள்ளிய நிலையில் இருந்த வாழை மரங்கள் ஒடிந்து விழுந்தன. அதே போல் பாலவனத்தம் இருக்கன்குடி சாலையில் உள்ள சென்னல்குடி கிராமத்தில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திலும் வாழை மரங்கள் ஒடிந்து விழுந்தன.

இது குறித்து சோளகவுண்டன்பட்டி விவசாயி குருசாமி கூறுகையில், ‘2.5 ஏக்கர் தோட்டத்தில் 3,500 முப்பெட்டகம் ரக வாழை மரங்கள் காய்கள் தள்ளிய நிலையில் இருந்தன. இதில், 1500 வாழை மரங்கள் சூறைக்காற்றில் ஒடிந்து விழுந்து விட்டன. குலை தள்ளிய நிலையில் விழுந்துள்ள ஒவ்வொரு மரத்தின் மூலம் ரூ.90 ஆயிரம் சேதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார். சென்னல்குடி விவசாயி வடிவேல் கூறுகையில், ‘1.5 ஏக்கர் தோட்டத்தில் 1,700 முப்பெட்டகம் ரக வாழை மரங்கள் குலை தள்ளிய நிலையில் இருந்தன. இவற்றில் 600 மரங்கள் வரை சூறாவளி காற்றுக்கு ஓடிந்து விழுந்து விட்டன. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்து இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிசேகரனிடம் கேட்டபோது, ‘சூறைக்காற்றில் விழுந்து சேதமடைந்த வாழை மரங்கள் அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதேபோல திருவில்லிபுத்தூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு வாழை, மா, கரும்பு ஆகியவை சாய்ந்து சேதமடைந்தன. சிவகாசி பகுதியில் சூறாவளிக்காற்றுக்கு வாழை மரங்கள் சாய்ந்துள்ளன. எனவே, சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : hurricane ,
× RELATED வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான பாஜ...