×

தேர்தல் விதிமுறை மீறல் மாவட்டத்தில் 87 வழக்குகள் பதிவு

சிவகங்கை, ஏப்.24: தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்.18ம் தேதி மக்களவை தேர்தல் நடத்து முடிந்தது. இதற்கான அறிவிப்பு மார்ச்.10ல் வெளியிடப்பட்டு அன்றே தேர்தல் விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டன. பல்வேறு நடத்தை விதிகள் இருந்தாலும் வாகன பரிசோதனை மற்றும் கட்சியினர் நடத்தக் கூடிய கூட்டங்களில் விதிமுறை மீறல் முக்கியமானதாக இருந்தது. இதுபோன்ற சோதனைகள் எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்கள், அவர்களுடைய வாகனங்களில் மட்டுமே நடத்தப்பட்டதாகவும் மத்திய, மாநில அரசுகளான பிஜேபி, அதிமுக விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் பறக்கும்படை அதிகாரிகள் இருந்ததாகவும குற்றச்சாட்டு எழுந்தது.

எதிர்க்கட்சிகள் நடத்தும் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் உள்ளே புகுந்து சோதனை செய்த அதிகாரிகள் அதிமுக, பிஜேபி நடத்தும் கூட்டங்களில் வெளியில் நின்று விட்டு கண்டும் காணாதது போல் சென்றனர். விதிமுறை மீறல் வழக்குகளும் அதிகமாக எதிர்க்கட்சிகள் மீதே பதிவு செய்யப்பட்டன. விதிமுறைகளை மீறியதாக அதிகபட்சமாக அமமுக மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்பட மாவட்டம் முழுவதும் இதுவரை 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிமுக, பிஜேபியினர் தேர்தல் விதிமுறைகளை மீறி கூடுதல் வாகனங்களில் செல்லுதல், தேர்தல் ஆலோசனை கூட்டங்களில் பணம் வழங்குதல் உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டும் அவர்கள் மீது போதிய அளவில் வழக்குகள் இல்லை. எதிர்க்கட்சியினர் கூறியதாவது: எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனை கூட்டங்களுக்குள் புகுந்து சோதனை செய்த அலுவலர்கள் ஆளும் கட்சியினர் நடத்தும் கூட்டங்களுக்குள் செல்ல அச்சமடைந்தனர். இதனால் ஆளும் கட்சியினர் பணம் சப்ளை செய்தது எவ்வித பிரச்னையும் இல்லாமல் நடந்தது என்றனர்.

Tags : Election Commission ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...