×

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தலுக்கு தேர்தல் குறையும் வாக்குப்பதிவு 2011ல் 75.9%, 2014ல் 72.8%, 2016ல் 71.11% 2019ல் 69.34% ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை மக்கள் இழக்கின்றனரா?

சிவகங்கை, ஏப். 24: சிவகங்கை மாவட்டத்தில் தேர்தலுக்கு தேர்தல் வாக்குச்சதவீதம் குறைந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் ஜனநாயகத்தின் நம்பிக்கை இழந்து வருகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2011, 2014, 2016ல் பதிவான வாக்குகளைவிட நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. கடந்த 2011ல் சட்டமன்ற தேர்தலின்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை (தனி), திருப்பத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரத்து 370 பேர். இதில், 6 லட்சத்து 60 ஆயிரத்து 659 பேர் வாக்களித்தனர். வாக்கு சதவீதம் 75.9 ஆகும்.

கடந்த 2014ல் நடந்த மக்களவை தேர்தலில், சிவகங்கை மக்களவை தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மொத்த வாக்குகள் 14 லட்சத்து 10 ஆயிரத்து 287. இதில், 10 லட்சத்து 27 ஆயிரத்து 58 வாக்குகள் பதிவாகின. வாக்கு சதவீதம் 72.8 ஆகும். 2016 சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 80 ஆயிரத்து 751 பேர். இதில், 7 லட்சத்து 68 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர். வாக்கு சதவீதம் 71.11 ஆகும். தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 15 லட்சத்து 50 ஆயிரத்து 390 பேர் ஆகும். இதில், பெண்கள் 7 லட்சத்து 84 ஆயிரத்து 513. ஆண்கள் 7 லட்சத்து 65 ஆயிரத்து 811, பிற பாலினத்தவர் 66 நபர்கள் ஆவர். இதில், ஆண்கள் 4 லட்சத்து 93 ஆயிரத்து 968 பேரும், பெண்கள் 5 லட்சத்து 81 ஆயிரத்து 133 பேரும், பிற பாலினத்தவர் 13 பேரும் என மொத்தம் 10 லட்சத்து 75 ஆயிரத்து 114 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். வாக்கு சதவீதம் 69.34 ஆகும்.

2011ல் இருந்து தற்போது வரை நடந்து முடிந்துள்ள இரண்டு மக்களவை தேர்தல் மற்றும் இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் 2011ம் ஆண்டு தேர்தலில் 75.9 வாக்கு சதவீதத்தில் இருந்து படிப்படியாக குறைந்து தற்போதைய தேர்தலில் 69.34 வாக்கு சதவீதத்திற்கு வந்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் 6 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அரசியல் கட்சியினர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலானவர்கள் வெளிநாடுகள், வெளியூர்களில் வேலைவாய்ப்பிற்காக வசித்து வருகின்றனர். அதனால், வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் பிற மாவட்டங்களிலும் இதே நிலையே உள்ளதால் வாக்களிப்பது குறித்த ஒட்டு மொத்தமாக ஒரே மாதிரியான மனநிலை தான் காரணம்’ என்றனர்.

Tags : district ,Sivagangai ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி